சினிமா ஃபைனான்சியர் வழக்கு - நடிகர் தனுஷின் தந்தைக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
இயக்குநர் கஸ்தூரி ராஜா நவம்பர் 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவு
ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சினிமா ஃபைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில், நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜா தன்னிடம் 65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கஸ்தூரி ராஜாவை வழக்கில் இருந்து விடுவித்தது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து , தன் கையெழுத்திட்ட காசோலையை தவறாக பயன்படுத்தியதாக, ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா மற்றும் அவரது மகன் ககன் போத்ராவுக்கு எதிராக கஸ்தூரி ராஜா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் முகுந்த்சந்த் போத்ரா காலமானாதை அடுத்து அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ககன் போத்ரா மீதான வழக்கை மட்டும் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ககன் போத்ராவை துன்புறுத்தும் நோக்கில் கஸ்தூரி ராஜா மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தது.இந்நிலையில், தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறி, பொய் வழக்கு தாக்கல் செய்து மன ரீதியான துன்புறுத்தலை ஏற்படுத்தியதற்காக இயக்குநர் கஸ்தூரி ராஜா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ககன் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன், இயக்குநர் கஸ்தூரி ராஜா நவம்பர் 15ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
What's Your Reaction?