இன்று முதல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நேற்றிரவு முதல் சென்னை உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது இன்னும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக அக்.17 அல்லது 18ம் தேதி மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னைக்கு இன்று முதல் ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். முன்னதாக அக்.16ம் தேதி மட்டுமே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது, இன்று ஆரஞ்ச் அலர் விடுத்திருந்தது. ஆனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் தொடர்ந்து மழை அதிகரிக்கும். இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். இன்று தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி உள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை உள்ள காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை 12 செ.மீ பெய்துள்ளது. இயல்பு அளவு 7 செ.மீ என்ற நிலையில் இது இயல்பை விட 84 சதவீதம் அதிகம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கலுக்கு நேற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்ட நிலையில் வானிலையில் ஏற்படும் தொடர் மாற்றும் காரணமாக இன்று அந்த அறிவிப்பு மாற்றப்பட்டு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்
மேலும், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 42 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு தமிழகம் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்” என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
What's Your Reaction?