தவெக மாநாடு சொன்ன தேதியில் சொன்னபடி நடக்கும் - புஸ்ஸி ஆனந்த்
திட்டமிட்டபடியே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது இந்த ஆண்டு அரசியல் களத்தில் முக்கியப் பேசுபொருளானது. அரசியல் கட்சி தொடங்கிய விஜய் அக்கட்சிக்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்கிற பெயரையும் அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகப்படுத்தினார் விஜய். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து விஜய் தனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் படியாக இம்மாதம் மாபெரும் மாநாட்டை அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலையில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது. இக்கட்சித் தொண்டர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர். இந்நிலையில் மாநாட்டுக்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்கக் கோரி அக்கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் அளித்திருந்தார். இக்கடிதத்தை அடுத்து காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் அதற்கு பதில் அளித்திருந்தது. இருந்தும், மாநில மாநாடு நடைபெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வி .வி.திருமாலிடம், காவல்துறை விதித்த 32 நிபந்தனைகளுக்கான பதில் கடிதத்தைக் கொடுத்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்...
“தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுகான அனுமதி கேட்டு காவல் துறைக்கு கடிதம் வழங்கியிருந்தோம். காவல் துறை சார்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்தனர். அவர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்துவிட்டோம். ஆகவே இந்த மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்பது குறித்து கட்சித் தலைவர் விஜய் அறிவிப்பார். இந்த மாநாடு தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி மாநாடாக இருக்கும்” என்று கூறினார்.
What's Your Reaction?