2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடி - தவெக தலைவர் விஜய்
2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம்.
தவெகவின் மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வருவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து டெல்லி உள்ள தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் 6 மாதம் கழித்து தவெகவை அரசியல் கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் பின்னர் தவெக ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் தேர்வு என கட்சிப் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதனிடையே சமீபத்தில் தவெகவின் கட்சிக் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பையும் விஜய் வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக வேறு ஒரு தேதியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், காவல்துறையின் அனுமதி, கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தேதி தள்ளிப்போனது. இந்த அக்.27ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரம் அடைந்தது. இதற்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூமி பூஜைகள் தொடங்கப்பட்டு மாநாட்டு பந்தல் கால் நடப்பட்டது. இதன் பின்னர் திடீர் கனமழை காரணமாக மாநாடு நடக்க உள்ள வி.சாலையில் உள்ள பகுதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் மாநாட்டு பணிகள் சற்று தொய்வு ஏற்பட்டது. மழையால் மாநாட்டு தேதி தள்ளிப்போகலாம் என சொல்லப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டாலும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. குறிப்பாக பெண் நிர்வாகிகள் அமர தனியே இருக்கைகள், மருத்துவக்குழுக்கள், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டர்களுக்கு பார்க்கிங் பிரச்னை ஏதும் நிகழாத வண்ணம், கூடுதல் பார்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு பந்தலுக்கு விஜய் வர தனியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. வி. சாலையில் மாநாடு நடக்கும் இடத்தில் தவெகவின் பிரமாண்ட கொடியை விஜய் ஏற்றி வைக்க உள்ளார். இந்த கொடியானது அந்த இடத்தில் 10 ஆண்டுகளுக்கு இருக்கும் வகையில் நில உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ள தவெக மாநாட்டு பந்தலில் நிர்வாகிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தவெக தலைவர் விஜய் கூறியுள்ளதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது.மாநாடு நிகழப்போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.
தமிழக உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம்.நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.
அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக,பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம்.
நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்.”என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?