இன்னும் பத்து வருஷத்துக்கு தவெக கொடி பறக்கப்போகுதா?.... தவெகவின் அடுத்த அதிரடி நகர்வு.....
தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் தவெக தலைவர் விஜய் ஏற்ற உள்ள கட்சிக்கொடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம்வந்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளவர் நடிகர் முன்னணி நடிகராக இருந்தாலும் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தற்போது களமிறங்கியுள்ளார்.
இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அதில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்த விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, விஜயகாந்த், சீமான், சரத்குமார், டி,ஆர்., என பல முன்னணி திரைமுகங்கள் தங்களது அரசியல் பயணத்தை கையில் எடுத்ததைப் போல தற்போது அதிக ரசிகர் பலத்தை உடையவராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வருவாரா என பேச்சுகள் எழுந்த போது தொடர்ந்து மௌனம் காத்து வந்த விஜய் திடீரென தனது கட்சியை பதிவு செய்தார். பின் திடீரென தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்து, பின் கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
பின்னர், அவரது இந்த அரசியல் வருகை குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர். சினிமாவிலிருந்து வந்த விஜய்க்கு அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் இருக்காது என விமர்சித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரது அரசியல் செய்லபாடுகளை தீவிரமாக விமர்சித்தும் வந்தனர். இதனால், தொடர்ந்து, தனது அரசியல் நகர்வுகளை கவனமாகவும், வித்தியாசமாகவும் செயல்படுத்தி வருகிறார். அறிக்கைகள் வெளியிடுவது, கண்டனங்கள் தெரிவிப்பது, முக்கிய நாட்களில் வாழ்த்துகல் சொல்வது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
இவ்வாறிருக்க, தனது கட்சியின் முதல் கொள்கை விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார் விஜய். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே தவெக மாநாடு நடைபெறுவதால், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநாட்டு திடல் உட்பட அதன் சுற்றுப்புர பகுதிகளில் மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தவெக கொடிக்கம்பங்கள் ஆங்காங்கே நடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், விஜய்யின் உருவம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூன்களையும் அக்கட்சியினர் பறக்கவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மேடை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தவெக மாநாட்டு பணிகளை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தலைவர் விஜய் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மாநாட்டுத் திடலில் விஜய் 100 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்ற உள்ளார். விஜய் கொடியேற்ற உள்ள கொடி கம்பத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் கொடியேற்றக்கூடிய இந்த கொடிக்கம்பத்தை 10 ஆண்டுகளுக்கு அகற்ற வேண்டாம் என நில உரிமையாளர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, நிலத்தில் கான்கிரீட் தளம் அமைத்து கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாடு முடிந்தவுடன் மாநாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மற்ற இடங்கள் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படி ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் கொடிக்கம்பத்தை மட்டும் அகற்றாதபடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?