Operation Sindoor: வெறும் 25 நிமிடங்களில்..9 இடங்களில் தாக்குதல்: ஆபரேஷன் சிந்தூர் எதற்காக?
பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) மூலம் இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டு, நமது உரிமையை நிலைநாட்டியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Operation Sindoor: இந்தியா சார்பில் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 1:05 மணி முதல் 1:30 மணி வரை என வெறும் 25 நிமிடங்களில் 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன. உளவுத்துறை கொடுத்த நம்பகமான தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கர்னல் ஷோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இன்று செய்தியாளர்கள் சந்தித்தனர்.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில், ”பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தவர்களை தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பதே தீவிரவாதிகளின் நோக்கம். பஹல்காம் தாக்குதல் நடந்து 15 நாட்கள் ஆகியும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோதலை அதிகப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை” என தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்:
மேலும், ”பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான் உதவியாக இருந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது” எனவும் குறிப்பிட்டார்.
காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடைப்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற் ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (Resistance Front) என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இதன் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு இதில் உள்ள தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






