மன்னிக்கவும் கர்நாடகா.. வருத்தம் தெரிவித்தார் பாடகர் சோனு நிகம்
முன்னணி திரையிசை பாடகரான சோனு நிகம், கன்னடர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்சையாகிய நிலையில், அவருக்கு எதிராக கன்னட திரையுலகம் போர்க்கொடி தூக்கியது. இதனையடுத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் சோனு நிகம்.

பிரபல திரையிசை பாடகரான சோனு நிகம், இந்தி, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு பிராந்திய மொழிகளில் 5000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஜீன்ஸ்,மதராஸ்பட்டினம், சங்கமம் போன்ற படங்களிலும் பாடியுள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி நடைப்பெற்ற நேரடி இசை நிகழ்ச்சியின் போது பாடகர் சோனு நிகம், அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக ஒரு சர்ச்சையில் சிக்கினார். பார்வையாளர்களில் ஒருவர் கன்னட பாடல்களைப் பாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, அவர், “கன்னடம், கன்னடம், கன்னடம் -- இதனால்தான் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது” என்று கூறினார்.
இந்த சம்பவத்தின் காணொளி வைரலானதை அடுத்து, கன்னட ஆர்வலர் ஒருவர் மே 3 ஆம் தேதியன்று அவலஹள்ளி பகுதியிலுள்ள போலீசில் புகார் அளித்தார், அதில் பாடகரின் கருத்து கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். புகாரின் அடிப்படையில், சோனு மீது குற்றவியல் மிரட்டல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்காக சோனு நிகம் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு மத்தியில் தான், கன்னடர்களுக்கு எதிரான கருத்துக்களுக்காக, கன்னட திரைப்படங்கள்/ஆல்பங்களில் பணியாற்ற பின்னணிப் பாடகர் சோனு நிகமுக்கு தடை விதித்தது கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC-Karnataka Film Chamber of Commerce). சோனு நிகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை இந்த தடை உத்தரவு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தடை தொடர்பான உத்தரவு வெளியானதை தொடர்ந்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார் சோனு நிகம். தனது பதிவில், "மன்னிக்கவும் கர்நாடகா. உன் மீதான என் அன்பு, என் ஈகோவை விட பெரியது. உன்னை எப்போதும் நேசிக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தனது கருத்து சர்ச்சையான போது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு பதிவிட்டு இருந்தார் சோனு நிகம். அதில், ”யாரிடமிருந்தும் அவமானத்தை ஏற்க நான் இளைஞன் அல்ல. எனக்கு 51 வயது, என் மகனைப் போன்ற ஒரு இளையவர் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மொழியின் பெயரால் என்னை நேரடியாக மிரட்டியதற்காக கோபப்பட எனக்கு உரிமை உண்டு. என் வேலை என்று வரும்போது கன்னடம் என் இரண்டாவது மொழி.
கச்சேரியின் முதல் பாடலுக்குப் பிறகு கன்னடப் பாடல்களைப் பாடும்படி கேட்டார். நிகழ்ச்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது, இது எனது முதல் பாடல், நான் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என்று நான் அவர்களிடம் மிகவும் பணிவாகவும் அன்பாகவும் சொன்னேன், ஆனால் நான் திட்டமிட்டபடி கச்சேரியைத் தொடர அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை.
ஒவ்வொரு கலைஞரும் ஒரு பாடல் பட்டியலைத் தயாரித்து வைத்திருப்பார்கள். அதற்கேற்ப இசைக்கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சி எடுத்து இருப்போம். ஆனால் அவர்கள் சலசலப்பை உருவாக்கி என்னை வெறித்தனமாக அச்சுறுத்துவதில் குறியாக இருந்தார்கள்," என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
What's Your Reaction?






