Hardik Pandya: ஒரு ஓவருக்கு 11 பந்து.. மும்பை அணி தோல்விக்கு காரணம் ஹர்திக் ஈகோவா?
கடைசி பந்தில் குஜராத் அணியிடம் மும்பை அணி தோல்வியுற்ற நிலையில், இதற்கு காரணம் ஹர்த்திக் பாண்டியாவின் (Hardik Pandya) பொறுப்பற்ற தன்மை தான் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நடைப்பெற்று வரும் ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் 14 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், எந்த அணியும் இதுவரை ப்ளே-ஆப் நுழையவில்லை. நேற்றைய போட்டியில் மும்பை அணி, குஜராத் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியுற்ற நிலையில் ப்ளே-ஆப் கனவு மங்கியுள்ளது ஹார்திக் தலைமையிலான மும்பை அணிக்கு.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை அணி குஜராத் அணியை எதிர்க்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் அணியின் சுப்மன் கில் பந்துவீச்சினை தேர்வு செய்தார்.
சொதப்பிய மும்பை வீரர்கள்:
மும்பை அணியின் ரோகித் மற்றும் ரிக்கல்டன் வந்த வேகத்தில் நடையை கட்ட ஜாக்ஸ் மற்றும் சூர்யக்குமார் யாதவ் மும்பை அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். ஜாக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அரை சதம் கடந்தார். 12 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் குவித்து வலுவான நிலையில் தான் மும்பை இருந்தது.
ஆனால், அதன் பின் வந்த வீரர்கள், ஏன் வந்தார்கள் என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தான் மட்டையினை சுழற்றினார்கள். ஒருக்கட்டத்தில் மும்பை அணி ரசிகர்களே சோர்ந்து போய்விட்டனர். வான்கடே மைதானம் முழுவதும் நிசப்தம் நிலவியது. கடைசி ஓவரில் கார்பின் போஸ் இரண்டு சிக்ஸரினை பறக்கவிட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மழையும்-பும்ராவும்:
156 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 5 ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். சுப்மன் கில், பட்லர் பொறுமையாக விக்கெட் வீழாமல் ஸ்கோரினை உயர்த்தி வந்தனர். மும்பை ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பையும் மீறி எல்லாம் மும்பைக்கு சாதகமாக தான் போய் கொண்டு இருந்தது. அங்க தான் ட்விஸ்ட் நடந்தது. 8 வது ஓவரினை வீச மும்பை கேப்டன் ஹார்த்திக் வந்தார். 2 நோபால், 3 அகலப்பந்து என மொத்தம் 11 பந்துகளை வீசி 8-வது ஓவரில் வீசினார். பாண்டியா வீசிய ஒரே ஒவரில் 18 ரன்களை குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது குஜராத் அணி.
இதற்கு நடுவில் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்கிற சூழ்நிலை நிலவியதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி யார் முன்னிலை என்கிற கோணத்தில் ஆட்டம் நகரத் தொடங்கியது. அஸ்வனி குமார், பட்லரை வீழ்த்தி பார்ட்னர்ஷிப்பை உடைத்து மும்பை ரசிகர்களை நிம்மதியடையச் செய்தார். இம்பாக்ட் வீரரான ரூதர்ஃபோர்ட் சில சிக்சர்களை பறக்கவிட ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது.
எதிர்ப்பார்த்தது போல மழை வந்து ஆட்டம் தடைப்பட்டது. சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கிய நிலையில் கில்லை க்ளீன் போல்டாக்கினார் பும்..பும்..பும்ரா. இதை தான் எதிர்ப்பார்த்தோம் என மும்பை ரசிகர்கள் துள்ளிக்குதிக்க, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது குஜராத்.
ஒருக்கட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் குஜராத் வெற்றி என்கிற நிலை வந்த போது சிக்ஸர், பவுண்டரி, நோ பால் என ரன்களை வாரி வழங்கினார் தீபக் சஹார். கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அர்ஷத் மிட் ஆன் திசையில் பந்தை அடித்து விட்டு ஓடினார். ஹார்த்திக் பாண்டியா (Hardik Pandya) வீசிய த்ரோ ஸ்டெம்பை பதம் பார்க்க தவறிய நிலையில். குஜராத் அணி
3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஹார்த்திக் பாண்டியா அந்த பந்தை சூர்யக்குமார் யாதவின் கையில் கொடுத்திருந்தால் கூட எளிதில் அவுட் செய்திருக்கலாம். ஹார்த்திக் பாண்டியாவின் ஈகோ தான் தோல்விக்கு காரணம் என மும்பை ரசிகர்கள் வசைபாடத் தொடங்கிவிட்டனர் சமூக வலைத்தளங்களில். போட்டியில் வென்ற குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய மும்பை அணி, எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
What's Your Reaction?






