”உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார்..கட்சியினர் அணிந்து வந்தால் ஒப்புக்கொள்வாரா?”
வான் சாகச நிகழ்ச்சியில் மக்களுக்கென எந்தவிதமான வசதிகளும் செய்து வைக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சொத்து வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்தி வருவதை கண்டித்து அதிமுக சார்பில் சென்னை ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வான் சாகச நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளாமல், சோற்றில் முழு பூசணிக்காயை வைத்து மறைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. வான் சாகச நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வசதியோ, குடிநீர் வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ, போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வசதிகளோ, எதுவுமே இல்லை.”
”பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட கார் பந்தயத்தை நடத்துவதற்கு முன்பு, துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் உட்ப்பட 10 அரசு துறைகள் பலமுறை கார் பந்தயம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். ஆனால் வான் சாகச நிகழ்ச்சிக்கு முன்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒரு கூட்டத்தையாவது அரசு நடத்தியதா?”
”இதை நீதிமன்றம் சும்மா விடக்கூடாது. நீதிமன்றம் இது குறித்து தாமாகவே முன்வந்து விசாரணை செய்ய வேண்டும்.
வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும். மேலும் மரணித்தவரின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.”
”அரசு முன்னேற்பாடுகளிலும் முன்னெச்சரிக்கைகளையும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
அரசுக்கு என்று ஒரு முறை உள்ளது. துணை முதல்வராக உள்ள உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார் இதேபோல் முதன்மை செயலாளரோ அல்லது அரசு சார்ந்த துறை செயலாளர்களோ டீ-சர்ட் அணிந்து வந்தால் அதை அவர் ஒத்துக் கொள்வாரா?” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?