முருகனை தரிசிக்க படியேறி சென்ற பக்தர் பலி ! ஹார்ட்- அட்டாக் தான் காரணமாம்!

படிக்கட்டுகள் வழியாக சாமி தரிசனம் செய்ய பயபக்தியுடன் வேகமாக ஏறிச்சென்றவர் பலி

May 8, 2024 - 20:11
May 8, 2024 - 20:14
முருகனை தரிசிக்க படியேறி சென்ற பக்தர் பலி ! ஹார்ட்- அட்டாக் தான் காரணமாம்!

திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய படியேறி சென்ற பக்தர் திடீரென்று கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கிறது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்துகொண்ட தலமாகும். இக்கோயிலின் சிறப்பம்சமாக ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகள் உள்ளது. இந்த மலைக்கோயில் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் என்பதும் குறிப்பிடதக்கது.  

இந்நிலையில்,  திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் கிருத்திகையை ஒட்டி பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் கோயில் எங்கும் தேனிக்கூட்டை போல பக்தர்கள் குவிந்து காணப்பட்டனர். இதனிடையே சோழவரத்தைச் சேர்ந்த முத்து என்பவர் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் வேனில் சென்றார். அப்போது, முத்து படிக்கட்டுகள் வழியாக சாமி தரிசனம் செய்ய பயபக்தியுடன் வேகமாக ஏறிச்சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது எதிர்பார்க்காத நொடியில் முத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள், சோதனை செய்த பார்த்துவிட்டு அவருக்கு நாடி துடிப்பு இல்லை என்று தெரிவித்தனர்.  தொடர்ந்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்று பார்த்தபோது, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்து உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow