ஆர்.எஸ்.எஸ் பேரணி:  அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் நீக்கம் -இபிஎஸ் நடவடிக்கை

தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Oct 8, 2024 - 14:54
ஆர்.எஸ்.எஸ் பேரணி:  அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் நீக்கம் -இபிஎஸ் நடவடிக்கை

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை துவக்கி வைத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத்தில் ஈசாத்தி மங்கலத்தில் நடைப்பெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அதிமுக முக்கிய தலைவர்களின் ஒருவரும் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

ஊர்வலமானது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவரங்காடு ஜங்ஷன் வழியாக பூதப்பாண்டி ஜீவா திடலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

 இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், திருச்சியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜாவிடம் , ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்தது தொடர்பாக கன்னியாகுமரியை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என கூறினார். இதனால் தளவாய் சுந்தரம் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தளவாய் சுந்தரம் கடந்த அதிமுக ஆட்சியில் டெல்லியின் தமிழக பிரதிநிதியாக செயல்பட்டு வந்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய முகமாக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது மாவட்ட அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow