நெடுஞ்சாலையில் தொடரும் மர்மம்.. பயணிகளை குறிவைக்கும் கும்பல்.. NH79-இல் நடப்பது என்ன..?
கள்ளக்குறிச்சி அருகே இரவு நேரங்களில் வாகனங்களை தாக்கும் மர்ம கும்பலால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் பீதியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூருக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எ.குமாரமங்கலம் காப்புக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காப்புக்காட்டில் பதுங்கி இருந்த மர்ம கும்பல், பேருந்தின் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பேருந்தில் சென்ற பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காப்புக்காட்டு பகுதியில் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியாக செல்லும் வாகன ஓட்டிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள காப்புக்காட்டில் மர்ம நபர்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது பகல் வேளையிலேயே தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்கியது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்தும் மர்ம கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?