இடைத்தேர்தல் போட்டி... துர்கா கொடுத்த அழுத்தமே காரணமா? சித்தரஞ்சன் சாலை மீட்டிங் லீக்ஸ்!

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக போட்டியிடுவதற்கு பின்னணியில் துர்கா ஸ்டாலினின் அழுத்தம் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கவனத்தை பெற்றுள்ளது. 

Sep 12, 2026 - 21:00
Sep 12, 2026 - 18:13
இடைத்தேர்தல் போட்டி... துர்கா கொடுத்த அழுத்தமே காரணமா? சித்தரஞ்சன் சாலை மீட்டிங் லீக்ஸ்!

இரு தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துர்கா ஸ்டாலின் தெரிவித்த கருத்து, திமுக இடைத்தேர்தல் களத்தில் குதிக்க முக்கிய காரணமாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கண்டிப்பாக போட்டியிட வேண்டும்” – துர்கா ஸ்டாலின்

செப்டம்பர் 7ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், அதிமுக தரப்பில் விருப்பமனு விநியோகம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் வேகமெடுத்தன.
அதேநேரத்தில், திமுகவில் உட்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்ததால், இடைத்தேர்தலை அக்கட்சி புறக்கணிக்கலாம் என்ற தகவல்கள் பரவின. குறிப்பாக, இரு தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாக இருந்ததால், திமுக போட்டியில் இருந்து விலகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இந்தச் சூழலில், செப்டம்பர் 8ஆம் தேதி இரவு சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

அப்போது, வரவிருக்கும் தேர்தல்களில் திமுக நிச்சயம் போட்டியிட வேண்டும் என துர்கா ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கருத்தை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மதுராந்தகம்... “டஃப் பைட் கொடுக்கலாம்!”

தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடமும் தொகுதிகளின் கள நிலவரம் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதி குறித்து தா.மோ.அன்பரசனிடம் ஸ்டாலின் கேட்டபோது, ஆளுங்கட்சி மற்றும் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக களமிறங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து தேர்தல் வியூகத்தை வகுக்கலாம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெற்றி இலக்காக இருந்தாலும், வெற்றி தவறினாலும் வலுவான போட்டியை கொடுக்கும் நிலையில் திமுக இருக்க வேண்டும் என்ற கருத்தும் ஆலோசனையில் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பேசிய சுந்தர், “போட்டுப் பார்த்துவிடலாம்; நமக்குத் தெரியாத அரசியல் எதுவுமில்லை” என்ற ரீதியில் நம்பிக்கையுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தாராபுரத்தில் பெண்கள் வாக்கு முக்கியம்!

தாராபுரம் தொகுதி குறித்து ஆலோசித்தபோது, அங்கு பெண்கள் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், தேர்தல் முடிவை பெண்களின் வாக்குகள் தீர்மானிக்கக்கூடும் என பத்மநாபன் மற்றும் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்பதால், திமுகவும் களத்தில் இறங்கி முயற்சி செய்யலாம் என ஆலோசனையில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதன் பின்னரே மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமனையும், தாராபுரம் தொகுதிக்கு வழக்கறிஞர் சுகன்யா பரந்தாமனையும் வேட்பாளர்களாக களமிறக்க திமுக தலைமை முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரந்தாமனுக்கு மீண்டும் வாய்ப்பு... பின்னணியில் உதயநிதி?

மதுராந்தகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரந்தாமன், திமுக சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அப்போது அமைச்சராக இருந்த சேகர்பாபுவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் எழும்பூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்து வந்த பரந்தாமனை, மதுராந்தகம் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறக்க உதயநிதி பரிந்துரை செய்ததாகவும், அதற்கு ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகன்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு

தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா பரந்தாமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராக உள்ளார்.
அவரது கணவர் மாணிக்கவாசகம் தாராபுரம் ஒன்றிய இளைஞர் அணியில் துணை அமைப்பாளராக இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபனின் பரிந்துரையின் அடிப்படையில் சுகன்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, விருப்பமனு பெறப்படாமலும், வழக்கமான நேர்காணல் நடத்தப்படாமலும் இரு வேட்பாளர்களும் வேகமாக அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவுக்குள் கவனம் பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் களத்தில் குதித்துள்ள திமுகவின் இந்த அதிரடி வேட்பாளர் தேர்வுக்குப் பின்னால் நடைபெற்ற சித்தரஞ்சன் சாலை ஆலோசனைகள், துர்கா ஸ்டாலினின் அழுத்தம், உதயநிதியின் பரிந்துரை என அடுத்தடுத்த நகர்வுகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow