ஒரு பசுவுக்குள் ஓராயிரம் தெய்வங்கள்...வணங்கினால் கிடைக்கும் பலன் என்ன?
பசுவை கோமாதாவாகப் போற்றுவதன் பின்னணியில் உள்ள ஆன்மிக நம்பிக்கைகளையும், பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள் குடிகொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் கூறும் மகிமைகளையும் முழுமையாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
’கோமாதா எங்கள் குலமாதா’ என்கிறோம். பசு என்பது அம்மாவுக்கு நிகரானது.நம் குலத்தைக் காப்பதும் கூட! பசு இருக்கும் இடத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்! பசுவை எங்கு பார்த்தாலும் வணங்குவதை வழக்கமாகக்கொண்டிருக்கும். பசுவில் இருந்து கிடைக்கிற அனைத்துமே நமக்கு உணவாக, சத்தாக இருக்கின்றன என்பதும் கூடுதல் சிறப்பு!
கற்பகத்தரு என்று காமதேனுப் பசுவைச் சொல்லிப் போற்றுகிறோம். காமதேனு வழிபட்ட தலங்கள் என்று பல தலங்கள் அமைந்திருக்கின்றன. காமதேனுவின் குழந்தைகளான... அதாவது பட்டி முதலானவை வழிபட்ட தலத்தை பட்டீஸ்வரம் என வணங்குகிறோம். கோமாதா என்று நாம் கொண்டாடுகிற பசுவுக்குள் மிகப்பெரிய தாத்பர்யமே இருக்கிறது என முநீஸ்வர சாஸ்திரிகள் விவரிக்க விவரிக்க, மலைத்துப்போனேன்.
பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் இருக்கிறார்கள். கொம்புகளின் நுனியில் கோதாவரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் குடிகொண்டிருக்கின்றன. பசுவின் தலையில் சிவபெருமான் இருக்கிறார். பசுவின் நெற்றிக்கு நடுவே சிவசக்தியும் நாசியின் நுனியில் முருகப்பெருமானும் நாசிக்குள் வித்யாதரரும் இருந்து அருள்பாலிக்கிறார்கள் என சாஸ்திரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமா?
இரண்டு செவிகளின் நடுவில் அஸ்வினி தேவர், கண்களில் சந்திர சூரியர், பற்களில் வாயுதேவர், நாவில் வருண பகவான், ஓங்காரம் கொண்ட இதயத்தில் கலைமகள் குடிகொண்டிருப்பதாக விவரிக்கிற ஸ்லோகங்கள் இருக்கின்றன.
மணித்தலப் பகுதியில் இமயனும் இயக்கர்கள், உதடுகளில் உதய அஸ்தமன சந்தி தேவதைகள், கழுத்தில் இந்திரன், முரிப்பில் பன்னிருவர்கள், மார்பில் சாத்தியம் மிக்க தேவர்கள், பசுவின் நான்கு கால்களில் அனிலன் என்கிற வாயு, முழந்தாள்களில் மருத்துவர், குளம்பின் நுனியில் சர்ப்பர்கள் இருப்பதாக அழகுற விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.
குளம்பின் நடுவே கந்தர்வர்கள், குளம்பின் மேற்பகுதியில் அரம்பை மாதர், முதுகில் உருத்திரர், பசுவின் சந்திகள் பகுதிகளில் எட்டு வசுக்கள், அரைப்பகுதியில் பிதிர் தேவதைகள், யோனியில் சப்த மாதர்கள், குதத்தில் லக்ஷ்மிதேவி, வாய்ப்பகுதியில் சர்ப்பரசர்கள், பசுவின் வாலில் இருக்கும் முடிகளில் அடியவர்கள், பசுவின் மூத்திரத்தில் ஆகாய கங்கை இருப்பதாக பசுவின் ஒவ்வொரு பாகங்களும் தெய்வ சாந்நியத்துக்கு நிகரானது என்று சொல்லி வியக்க வைக்கிறது சாஸ்திரம்.
பசுவின் மூத்திரத்தை ஹோமியம் என்கிறோம். சாணத்தில் யமுனை நதி, ரோமங்களில் முனிவர்கள், வயிற்றில் பூமாதேவி, மடிக்காம்பில் சகல சமுத்திரங்கள் (கடல்), எலும்பிலும் சுக்கிலத்திலும் யாக வேள்விப்பலன்கள் என்றிருப்பதாக, பசு அங்க குணங்களையும் கடவுளரையும் முநீஸ்வர சாஸ்திரிகள் விவரித்தார்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. . இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் என்றிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இன்றைக்கும் இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம் (சாணம்), மூத்திரம் (கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் என வழிபாட்டுக்கு உரியதாகச் சொல்லப்படுகிறது.
பசுவின் பின்பக்கம் தொட்டு வழிபடுவார்கள் பக்தர்கள். இங்குதான் மகாலட்சுமி என்கிற திருமகள் இருக்கிறாள். மேலும் பின்பக்கத்தை தொட்டு வழிபட்டால், செல்வ வளம் பெருகும் என்கிறார்கள். முன் ஜென்ம பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
கோ சாலை அமைப்பதும் கோ சாலை அமைப்பதற்கு நிதியுதவி செய்வதும் புண்ணியம் என்கிறார்கள். பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, மந்திரங்கள் கொண்டு ஜபிக்கவேண்டும். மலர்களால் அர்ச்சிக்கவேண்டும். தூப,தீபங்கள் செய்து, நைவேத்தியங்கள் கொண்டு ஆராதனை செய்யவேண்டும்.
அடுத்ததாக மற்றுமொரு வழிபாடு.
பசுவின் திருநாமங்கள் ஏராளம். இவற்றையெல்லாம் சொல்லி வழிபடாவிட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவை வழிபடுவதற்குச் சமம்! பசுவுக்கு கோ சாலை அமைத்து பராமரித்து வருவோரிடம் பசுவுக்குத் தேவையான உணவுகளை தானமாக வழங்கி, புண்ணியங்களைச் சேர்க்கலாம்!
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமியின் அம்சம்! அதனால்தான், இன்றைக்கும் கிராமங்களில், வீட்டுவாசலில் சாணம் தெளித்து சுத்தப்படுத்துகிறார்கள். அந்தக் கால வீடுகளில், வீட்டு உள்பகுதியில் கூட சாணம் மெழுகி சுத்தம் செய்யும் வழக்கமெல்லாம் இருந்தது. பசுவுக்கு பூஜை செய்வது உலகையே ஆளும் பராசக்திக்கே பூஜை செய்வதற்கு நிகரானது என்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் முப்பெருந்தேவியரும் பசுவில் ஐக்கியம் கொண்டிருக்கிறார்கள்.
பசுவைப் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியம். தொட்டு வணங்குவதும் பழங்களோ கீரைகளோ தந்து வணங்கி வழிபடுவதும் நம் முன் ஜென்ம பாவங்களையும் பித்ரு சாபங்களையும் போக்கும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்!
இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, பசுவைப் பார்க்கவும் வணங்கவும் தோன்றும். பழங்களோ கீரைகளோ கொடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எழும்!
வி.ராம்ஜி
What's Your Reaction?

