தேசிய விருது: ராஜா, ரஹ்மான் வரிசையில் எலைட் லிஸ்டில் இணைந்த ஜிவி!
வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றதன் மூலம் ராஜா,ரஹ்மான் வரிசையில் எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

நேற்றையத் தினம், தலைநகர் டெல்லியில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த வாத்தி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினை வென்ற ஜிவி பிரகாஷ் குமார், வாத்தி படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்றுள்ளார்.
எலைட் லிஸ்டில் இணைந்த ஜிவி:
தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே இதுவரை சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது என 2 விருதுகளையும் வென்றிருந்தனர். தற்போது இந்த எலைட் லிஸ்டில் ஜி.வி.பிரகாஷ் குமாரும் இணைந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார். ரோஜா, மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும், மாம், பொன்னியின் செல்வன்-1 போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் வென்றுள்ளார்.
மேஸ்ட்ரோ இளையராஜா இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ளார். சகாரா சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீனா போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினையும், பழசி ராஜா, தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதினையும் வென்றுள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இரண்டாவது முறையாக தேசிய விருது வென்றுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விருதுகளை வாரிக்குவித்த பார்க்கிங்:
தமிழில் சிறந்த திரைப்படமாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய “பார்க்கிங்” திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுக்கு எம்.எஸ்.பாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு பார்க்கிங் படத்தின் இயக்குநர் ராம்குமார் தேர்வாகியுள்ளார்.
லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் வென்றுள்ளனர்.
What's Your Reaction?






