ரொம்ப லக்கி சார்.. ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால்: வெற்றி பெறுமா இந்தியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதத்துடன் களத்தில் இருக்கிறார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. தற்போது நடைப்பெற்று வரும் இறுதிப்போட்டியினை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்:
இரு அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி கியா ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 38 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் சாய் சுதர்ஷன் - சுப்மன் கில் இணை சிறிது நேரம் களத்தில் தாக்குப்பிடித்து நின்றார்கள்.
இந்தியாவின் பக்கம் நன்றாக ஆட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், சுப்மன் கில் தேவையில்லாத தருணத்தில் ரன் ஓட முயன்ற 21 ரன்னில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் சாய் 38 ரன்கள் எடுத்த நிலையில் டாங்க் பந்துவீச்சில் அவுட்டாகினார்.
ஒருபுறம் இந்தியாவின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய, மறுப்புறமும் மழையும் வெளுத்து வாங்கியது. இதனால், ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. கடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்த அசத்திய ஜடேஜா 9 ரன்களிலும், துருவ் ஜூரல் 19 ரன்களிலும் தங்களது விக்கெட்களை பறிக்கொடுக்க 150 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்திருந்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள்:
இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ஆரம்பித்த வேகத்திலேயே இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி வந்த கருண் நாயர் 57 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, வழக்கம் போல லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். வெறும் 20 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நடப்பது டெஸ்ட் போட்டியா? டி20 போட்டியா? என வியக்கும் அளவிற்கு பந்து நாலாப்புறமும் எல்லைக்கோட்டினை தாண்டி பறந்தது. முதல் விக்கெட்டுக்கு வெறும் 13 ஓவர்களில் 92 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. கேரவ்லி 64 ரன்களிலும், டக்கட் 43 ரன்களிலும், போப் 22 ரன்களிலும், ரூட் 29 ரன்களிலும் அவுட்டாகினார்.
நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை இங்கிலாந்து அணி. ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவே சிரமப்பட்டனர். இறுதியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் தரப்பில் சிராஜ் மற்றும் ப்ரஸீத் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால்:
23 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸினை தொடங்கியது இந்திய அணி. என்ன பாஸ் பண்றீங்க? என புலம்பும் வகையில் கே.எல்.ராகுல் மோசமான ஷாட் அடித்து 7 ரன்களில் அவுட்டாகினார். சாய் சுதர்சனும் 11 ரன்களில் வெளியேற நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார் ஆகாஷ் தீப். இங்கிலாந்து கொடுத்த அதே ட்ரீட்மெண்டை (அதிரடி ஆட்டத்தை) ஜெய்ஸ்வால் கையிலெடுத்தார். இங்கிலாந்து அணி வீரர்களும் 2 முறை ஜெய்ஸ்வாலின் கேட்சினை நழுவவிட்டார்கள். அதிர்ஷ்டம் நம்ம பக்கம் தான் என்பதை உணர்ந்த ஜெய்ஸ்வால் விக்கெட் வீழ்வதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 52 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ளதால், இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரினை இலக்காக நிர்ணயிக்க போராடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
What's Your Reaction?






