சென்னையில் இன்று கொட்டித்தீர்த்த கனமழை - தீபாவளிக்கு மழை பெய்யும் இடங்கள் இதோ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.31ம் தேதி )வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று ஒரு மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், திடீரென்று சுமார் ஒரு மணி நேரமாக சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட சென்னையில் பெரும்பாலான இடங்களின் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை நந்தனத்தில் பெய்த மழையால் தேவர் ஜெயந்திக்கு வந்த வாகனங்களால் நந்தனம், சைதாப்பேட்டை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ என்று அளவில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் வெறும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் நாளை ( அக்.31ம் தேதி ) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.31ம் தேதி )வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?