தனுஷின் குரலில் வெளியானது இட்லி கடையின் சிங்கிள் டிராக்!
தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’என்ன சுகம்’ என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா ஆகியோருடன் தனுஷும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தனுஷ் இயக்கி நடித்த படமாக ராயன் ரிலீஸானது. தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ராயனைத் தொடர்ந்து 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். 2கே கிட்ஸ்களின் லவ் ஸ்டோரியாக உருவாகியிருந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்ப்பார்த்த வசூலினை பெறவில்லை. இந்நிலையில், தனுஷின் இயக்கத்தில் அவரது 4-வது படமாக ‘இட்லி கடை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி ஆகியோரும் தனுஷுடன் இட்லி கடை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தில் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ”என்ன சுகம்” எனத் தொடங்கும் இந்த பாடலினை இயக்குநரும், நடிகருமான தனுஷ் எழுதியுள்ளார். இப்பாடலை ஸ்வேதா மோகனுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ளார். மெலோடி டிராக் ஆக வெளியாகியுள்ள இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 3 லட்சம் பார்வைகளை நெருங்கியுள்ளது. பாடலின் பின்னணி காட்சிகளில், படம் உருவாக்கும் போது எடுத்த சில ஷாட்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தனுஷ் இயக்கிய முதல் திரைப்படமான, பவர் பாண்டி போல இட்லி கடை திரைப்படமும் ஒரு பீல் குட் படமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எண்ணங்கள் தோன்றியுள்ளது. இயக்குநராக மிகப்பெரிய வெற்றியினை தனுஷ் அடைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






