Maharaja: அந்த லட்சுமி யாரு..? இந்த கதை 14வது வெர்சன்... மகாராஜா அப்டேட் சொன்ன நித்திலன் சாமிநாதன்!
விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகராஜா, ஜூன் 14ம் தேதிவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஜா இயக்குநர் நித்திலன் சாமிநாதன், இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
சென்னை: குரங்கு பொம்மை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். இரண்டாவதாக விஜய் சேதுபதியுடன் இணைந்த இவர், மகராஜா படத்தை இயக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஜா படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதியின் ஆக்டிங், ஆக்ஷன் இரண்டுமே செம்ம மாஸ்ஸாக இருந்தது. முக்கியமாக போலீஸ் ஸ்டேஷனில் லட்சுமியை காணவில்லை என விஜய் சேதுபதி புகார் கொடுக்கும் காட்சி, படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
மகாராஜா உருவான கதை
இந்நிலையில், மகாராஜா திரைப்படம் உருவானது குறித்து இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மனம் திறந்துள்ளார். அதில், குரங்கு பொம்மைக்கு பின் சற்றே இடைவெளி எடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளேன். நான் முதலில் எழுதிய திரைக்கதை வேறு, இது 14வது வெர்ஷன். கதையின் கரு மட்டும் அப்படியே இருக்கிறது. ஆரம்பத்தில் மகாராஜா விஜய்சேதுபதியின் 50வது படமாக அமையும் என எதிர்பார்க்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கும்போது விஜய் சேதுபதியின் 50வது படம் என அறிவிக்கப்பட்டதை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை கே.கே. நகரில் சலூன் கடை வைத்திருப்பவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அப்போது அவருக்கு ஒரு பிரச்சினை வருகிறது, இதனையடுத்து அவருக்கு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவுக்கு சின்ன கேரக்டர்
தொடர்ந்து பேசிய அவர், விஜய் சேதுபதியுடன் அபிராமி, மம்தாமோகன்தாஸ் இருவரும் நடித்துள்ளனர். இவர்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன சம்பந்தம் என்பது சஸ்பென்ஸ். அதேபோல், இயக்குநர் பாரதிராஜாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவரது பாரதிராஜாவுக்கு சின்ன வேடம் என்றாலும், ரொம்ப முக்கியமான கேரக்டர். குரங்கு பொம்மை படம் மூலமாக அஜனீஸ் லோகநாதனை நான்தான் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினேன். அடுத்து அவர் இசையமைத்த காந்தாரா வெற்றி பெற, அவர் எங்கயோ போய்விட்டார், இந்த படத்துக்கும் நல்ல இசை கொடுத்திருக்கிறார். அதேபோல், மகாராஜா படத்தில் வில்லனை முதலில் கமிட் பண்ணவில்லை. அதன் பின்னர் தான் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்திற்குள் வந்தார்.
இதுதான் மகாராஜா கதை
ஹீரோ விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் தான் மகாராஜா. இந்தப் படம் பார்த்து நீங்க சரியாக கனெக்டானால் நீங்களும் மகாராஜாதான். அதேபோல் மகாராஜா டிரைலரில் நீங்க பார்ப்பது 20 சதவீதம்தான், மீதி 80 சதவீதத்தை மறைத்து வைத்து இருக்கிறோம். மகாராஜா கண்டிப்பாக புது அனுபவமாக இருக்கும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது படம் சொல்லும் நீதி. சென்சாரில் வயலன்ஸ் காட்சிகளும் சில வார்த்தைகளும் இருப்பதால் யு.ஏ.சான்றிதழ் கிடைத்துள்ளது. 50வது படம் என்பதற்காக விஜய்சேதுபதி புதுசாக எதையும் செய்யவில்லை, இந்த கதையே புதுசாக இருக்கும். இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, அனுராக் காஷ்யப் நடித்திருப்பதால் அவர்களிடம் இருந்து நிறையவே கற்றுக்கொண்டேன். விஜய்சேதுபதியும் அவர் குடும்பத்தினரும் படம் பார்த்துவிட்டார்கள். என்னையே எனக்கு பிடிச்சிருக்குன்னு விஜய்சேதுபதி பாராட்டியதாக இயக்குநர் நித்திலன் சாமிநாதன் கூறியுள்ளார்.
What's Your Reaction?