ஆட்சியை கொடுங்க.. 6 நாட்களில் போதைப்பொருளை ஒழிக்கிறேன்: அன்புமணி
'நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. திமுகவை ஆட்சிக்கு வர வைத்து ஒருமுறை தவறு செய்துள்ளீர்கள். மீண்டும் இந்த தவறை செய்து விடாதீர்கள்' என தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்தின் போது அன்புமணி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

’தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் நூறு நாட்கள் நடைபயணத்தை அன்புமணி தொடங்கியுள்ளார். மூன்றாவது நாளான இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனது நடை பயணத்தை மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடினார்.
தனது நடைபயணத்தின் போது, அன்புமணி ஆளும் திமுக அரசினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். “ஸ்ரீபெரும்புதூர் சென்னை அருகே இருக்கும் பகுதி. ஸ்ரீபெரும்புதூரில் 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்தும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலைகளை சுற்றியுள்ள ஏரிகள் எந்த நிலையில் இருக்கின்றன? சுத்திகரிக்கப்படாத கழிவுநீரினை நேரடியாக ஏரியில் விட்டு விடுகிறார்கள். ஏரிகள் குறித்தோ விவசாயிகள் குறித்தோ ஏதாவது கவலைப்படுகிறார்களா ஆட்சியாளர்கள்? இங்கிருக்கின்ற மக்கள் மண்ணையும், தண்ணீரையும் இழந்த பிறகும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரவில்லை. இதெல்லாம் ஒரு வெட்கக்கேடான விஷயம்.
நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. திமுகவை ஆட்சிக்கு வர வைத்து ஒருமுறை தவறு செய்திருக்கிறீர்கள். மீண்டும் இந்த தவறை செய்து விடாதீர்கள்” என குறிப்பிட்டார்.
எங்களிடம் ஆட்சி கொடுங்கள்: அன்புமணி
”தமிழ்நாட்டின் பெயரை மாற்றி விட்டு, கஞ்சா நாடு என்று மாற்றி விடலாம். அந்தளவிற்கு போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. திமுகவிடம் இதை கேட்டால் சம்பவம் நடைபெறும் என்றுதான் கூறுகிறார்கள். இது ஒரு கேவலமான விஷயம். எங்களிடம் ஆட்சி கொடுத்தால் ஆறு மாதங்களில் குற்றச் செயல்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி விடுவேன். தப்பு செய்பவர்களுக்கு பயத்தை உண்டு செய்து விடுவோம்” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து போதை பொருட்களை என்னால் 6 நாட்களில் ஒழித்து விட முடியும். எங்களிடம் ஆட்சி கொடுத்துப் பாருங்கள் ஆறு நாட்களில் போதை பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்து காட்டுகிறோம். யாராவது காவல்துறைக்கு தெரியாமல் போதை பொருட்கள் விற்க முடியுமா? எங்களிடம் ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் எந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விற்கப்படுகிறதோ, அங்கிருக்கும் எஸ்ஐ நீக்கப்படுவார். இப்படி ஒரு நான்கைந்து காவல் நிலையத்தில் செய்தால் போதும், காவல்துறையினர் ஒழுங்காக வேலை செய்வார்கள்” என்றார்.
விவசாயிகள் தான் நம்முடைய கடவுள்:
”தமிழ்நாட்டில் 63 சதவீதம் பேர் விவசாய மற்றும் விவசாய சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் கூட மகிழ்ச்சியாக இல்லை. விவசாயிகளிடம் மகிழ்ச்சியாக இருக்கிறீங்களா என்று கேட்டால், நான் கயிற்றில் தொங்குவேன்? என வேதனையாக தெரிவிக்கின்றனர். விவசாயம் என்றால் எதுவும் தெரியாத ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். விவசாயிகள் தான் நம்முடைய கடவுள்”
”தேர்தல் சமயத்தில் திமுகவினர் ஏதாவது வந்து உங்களுக்கு இதை செய்வோம், அதை செய்வோம் என்று கூறினால் அவர்களைப் பார்த்து இந்த கேள்வியை மட்டும் கேளுங்கள். நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து நீங்கள் செய்யாததை இப்போது மட்டும் எப்படி செய்வீர்கள்? என கேள்வி எழுப்புங்கள்” என தெரிவித்தார்.
What's Your Reaction?






