சட்டவிரோத மதுவிற்பனை.. துணைபோகிறதா காவல்துறை? போட்டுக்கொடுத்தா கொலை மிரட்டல்..!
கடலூர் அருகே சட்டவிரோத மது விற்பனையை வீடியோவாக பதிவு செய்த செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியிருக்கு...என்னதான் நீங்க வீடியோ எடுத்துபோட்டாலும் அதப்பத்திலா கவலப்படமா பிளாக்ல சரக்கு ஓட்டுறவங்க ஓட்டிட்டுதான் இருக்காங்க...அப்படி சட்டவிரோதமா விற்பனை செய்றவங்கல பத்துன துப்பு கொடுக்குறவங்களுக்கு, பாதுகாப்பு கொடுக்காம, விற்பனை செய்யுற ஒயின்ஷாப்க்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கிட்டு வர்ரதாவும் சொல்லப்படுது... இதே மாதிரி கடந்த 24 மணி நேரத்துல நடந்த சம்பவங்கள் உங்களுக்காக...
கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் மகாவீர் ஜெயந்தி தினமான ஏப்ரல் 21-ம் தேதி அன்று சிலர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டனர். இதனை தனியார் நாளிதழ் செய்தியாளர் வேலன், வீடியோவாக பதிவு செய்தார். அப்போது அவருடன் மது விற்பனை கும்பல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து சென்ற செய்தியாளர் வேலன், காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இந்த நிலையில், வேலன் தனது நண்பர்களுடன் கழுதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததை அறிந்த மது விற்பனை கும்பல், வாகனத்தை வழிமறித்து அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதில், படுகாயமடைந்த வேலன், வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சட்டவிரோத மதுவிற்பனை குறித்து தகவல் அளித்த நபரை மது விற்கும் கும்பலிடம் போலீசாரே போட்டுக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமாபுரம் கிராமத்தில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக ஜேசுதாஸ் என்பவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். ஆனால், மதுவிற்கும் நபரை போலீசார் தொடர்பு கொண்டு ஜேசுதாஸின் செல்போன் எண்ணை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசுதாஸை கொலை செய்து விடுவோம் என மது விற்பவர்கள் செல்போனில் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த அவர், காட்டுக்குள் ஓடி தலைமறைவாக உள்ளார்.
அங்கிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் தெரிவித்தார். கள்ளத்தனமாக மது விற்கும் கும்பலுக்கு ஸ்ரீமுஷ்ணம் போலீசாரே உடந்தையாக செயல்படுவதாக கூறிய அவர், தான் இருக்கும் இடத்தை அவர்களுக்கு கூறினால் பரவாயில்லை, போனால் உயிர் தானே என்று ஜேசுதாஸ் பெரும் விரக்தியில் கூறினார்.
அதேபோல, சென்னை பெருங்குடி OMR சாலையில் பழைய சுங்கச்சாவடி அருகிலும் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள பழைய சுங்கச்சாவடி அருகிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிய பிறகு கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக விற்கப்படும் மதுபானங்களை வாங்க வரும் நபர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோல கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. செய்தியாளர் மீது தாக்குதல், தகவல் அளித்தவருக்கு கொலை மிரட்டல் என இதுபோன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை எடுத்ததுபோல் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், மது விற்பனைக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?