வருகிறது "தமிழ் புதல்வன் திட்டம்" - உயர்கல்விக்கான உதவி... இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000

உயர் கல்வி பயில மாணவர்களுக்கு உதவித்தொகை

May 8, 2024 - 13:36
வருகிறது "தமிழ் புதல்வன் திட்டம்" -  உயர்கல்விக்கான உதவி... இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தைப்போல், மாணவர்களுக்கு "தமிழ் புதல்வன் திட்டம்" வரும் கல்வியாண்டிலேயே தொடக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. 

அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, கலை-அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்கில், மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. 

உயர்கல்வியில் சேரும் மாணவர்கள், பாடப் புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்றிக்கொள்ள உதவிடும் வகையில் இந்த தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது.

இதனிடையே, புதுமைப் பெண் திட்டத்தைப்போல, 360 கோடியில் ரூபாய் செலவில், மாணவர்களுக்கும் அத்திட்டம் விரிவு படுத்தப்படும் என, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கும் "தமிழ் புதல்வன் திட்டம்" இந்த கல்வியாண்டிலேயே தொடக்கப்படும் என்று மாணவர்களுக்கு ஒரு குட்நியூஸ் கிடைத்துள்ளது. 

12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் தொடக்க விழா சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சரின் தனிச் செயலாளர் முருகானந்தம், புதுமைப் பெண் திட்டத்தைப் போல், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, "தமிழ் புதல்வன் திட்டம்" வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, 12 ஆம் வகுப்பு பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே இலக்கு என தெரிவித்தார்.

தமிழ் புதல்வன் திட்டம் குறித்த அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. புதுமைப் பெண் திட்டம் மிகுந்த உதவியாக இருக்கும் நிலையில், இந்த பயன் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow