ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 26 பேர் மீது குண்டாஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்த 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்த 26 பேர் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய அரசியல் கொலைகளில் ஒன்று தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், சதீஷ், செல்வராஜ், ஹரிஹரன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் 5 பேர் போலீஸ் காவலில் உள்ளனர்.
இதுவரை கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் ஆயுதங்கள், பணம், முன்விரோதம் போன்ற விவகாரங்களில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன் ஜெயிலில் இருந்துக்கொண்டே, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் பல மர்ம முடிச்சுகளை கொண்டிருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது தலைசுற்ற வைக்கும் அடுத்தடுத்த திருப்பமாக, ரவுடி நாகேந்திரனின் மகன் வழக்கறிஞர் அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளராக இருந்தவர் தான் வழக்கறிஞர் அஸ்வத்தாமன். இவரின் தந்தை சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவரம் அருகே மோரை என்னும் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில், ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி அஸ்வாத்தம்மன் துப்பாக்கியை காண்பித்ததாகவும் இதனால் இருதரப்புக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை அறிந்து பரோலில் வந்த நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை செல்போனில் அழைத்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலத்தகராறு காரணமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரவுடி நாகேந்திரன் சிறையில் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் எனவும் மகன் அஸ்வத்தாமனுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இது தொடர்பாக அஸ்வாத்தமனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதால் போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனிடம் நிலம் தொடர்பான தகராறில் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காண்பித்து மிரட்டியது உண்மையா? இது தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டதா என போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பிரபல ரவுடி நாகேந்திரன் சிறையிலிருந்து கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே அஸ்வத்தாமனின் தாயார் விசாலாட்சி அறிவுரை கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளார். அதில், தனது மகன் அஸ்வத்தாமன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலமாக பொய்யாக குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதாகவும் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?