பா.ம.க.வும்- வி.சி.க.வும் எங்களோடு இணைவார்கள்: இடும்பாவனம் கார்த்திக் பேட்டி!
எதிர்காலத்தில் பாமகவும்-விசிகவும் எங்களோடு இணைவார்கள் என நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் குமுதம் ரிப்ப்போர்ட்டருக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் முன்னணி கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என பலத்தை நிரூபித்து வரும் நிலையில், வித்தியாசமாக 'ஆடு மாடு மாநாடு' நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்காக வழங்கிய சிறப்பு நேர்க்காணல் விவரம் பின்வருமாறு-
ஆடு, மாடு மாநாட்டின் நோக்கம் என்ன?
ஆடு, மாடுகள் மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவை அனுமதிக்கப்படவேண்டும். மலைகளின் கனிம வளங்களை வெட்டி ஏற்றும்போது அதற்கு அனுமதி கொடுக்கும் அரசு, கால்நடைகள் மேய்வதற்கு எதற்கு அனுமதி மறுக்கிறது? ஆடு, மாடுகள் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் எடுத்துரைத்து மேய்ச்சல் உரிமை பெறுவதற்குதான் இந்த மாநாடு.
ஆனால், 'வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை வாங்கியதே சீமானின் தம்பிகளுள் ஒருவரான தீரன் திருமுருகன்தான். மேய்ச்சல் நில உரிமை விவகாரத்தில் நா.த.க. இரட்டை வேடம் போடுகிறது' என கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே?
அவர் தடை கோரியபோது நா.த.க.வில் இல்லை. அதன் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நா.த.க.வில் இணைந்துவிட்டார். அவர் வழக்குத் தொடுத்தார் என்றால், இதில் அரசின் நிலைப்பாடு என்ன, நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் தி.மு.க. அரசு அமல் செய்கிறதா?, 'பெரிய வணிக வளாகத்தை இடிக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தவிட்டால் இடித்துவிடுமா இந்த அரசு? நீதிமன்ற உத்தரவுக்கெல்லாம் இவர்கள் கீழ் படிவதில்லையே! அதையெல்லாம் பின்பற்றாதவர்கள் மேய்ச்சல் விவகாரத்தில் மட்டும் ஏன் பின்பற்றுகிறார்கள்?
தி.மு.க ஆட்சியில் லாக்அப் மரணங்கள் அதிகமென கடும் விமர்சனங்களை முன்வைக்கிறீர்களே.. அதிமுக ஆட்சியில் குறைவு என நினைக்கிறீர்களா?
இரண்டு ஆட்சியும் ஒன்றுதான். இரண்டு ஆட்சியிலும் காவல்துறை ஏவல் துறையாகவும், கூலிப்படை போலவும்தான் பயன்படுத்தப்படுகிறது. அங்கு சாத்தான்குளம் படுகொலை என்றால் இங்கு மடப்புரம் படுகொலை. பெரிய வேறுபாடு இல்லை.
எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் தொடங்கியிருக்கிறாரே... இது அ.தி.மு.கவுக்கு கைகொடுக்கும் என நினைக்கிறீர்களா?
எதிர் பரப்புரையை முன்கூட்டியே தொடங்குகிறார் என்றுதான் இதைப் பார்க்க வேண்டும். 'மக்களை சந்திப்பதே கை கொடுத்துவிடும். கூடுகின்ற கூட்டமெல்லாம் வாக்காக மாறிவிடும்' என்றால் அதற்கு வாய்ப்பில்லை. அ.தி.மு.க பலவீனமாக இருக்கிறது என நினைக்கிறார்கள். அதை சரிக்கட்ட இதுபோன்ற செயல்பாடுகளை செய்கிறார்கள்.
தி.மு.க., பா.ஜ.க.வை காட்டமாக விமர்சிக்கும் விஜய், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.கவை விமர்சிக்காததை எப்படி பார்க்கிறீர்கள்?
விஜய் தரப்பில் 'அ.தி.மு.க எங்கள் எதிரி இல்லை' என அறிவித்துவிட்டார்கள். பா.ஜ.க, தி.மு.கவோடு மட்டும்தான் கூட்டணியில்லை என்கிறார்கள். அ.தி.மு.க.வுடன் இல்லையென சொல்லவில்லையே... தி.மு.க., அ.தி.மு.க.வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இன்று தி.மு.க. என்னவெல்லாம் செய்கிறதோ அதையெல்லாம் அ.தி.மு.க ஒரு காலத்தில் செய்தது. அவர்கள் ஆட்சிக் காலத்தில் இதேபோல லஞ்சம், ஊழல், காவல்துறை அத்துமீறல் இருந்தது. கதிராமங்கலம், நெடுவாசல் என போராட்ட களங்களில் ஒடுக்கினார்கள்.
மதுபான கடையை மூடக் கோரி போராடிய பெண்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். பொள்ளாச்சி பாலியல் கொடுமையாக இருக்கட்டும், மாநில உரிமைகளை காவு கொடுத்ததாக இருக்கட்டும். எல்லாவற்றையும் அ.தி.மு.க செய்தது. இன்று பா.ஜ.க.வுடன் உறவில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்களும் அக்கூட்டணியை விரும்புகிறார்கள். ஆனால், அந்த அ.தி.மு.க.வை எதிரி இல்லை என்கிற இடத்தில் தா.வெ.க பார்க்கிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை!
தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்ற விமர்சனம் எழுகிறதே?
சட்டமன்ற எதிர்க்கட்சிதான் வலுவாக இல்லை. மக்கள் மன்ற எதிர்க்கட்சியாக நா.த.க. வலுவாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இப்போது நடந்திருப்பது 25-வது லாக்அப் மரணம். சாத்தான்குளம் பேசப்பட்டதுபோல மற்றதெல்லாம் பேசு பொருளாகவில்லை.
'புரட்சி பாரதம் கட்சியுடன் ஓரணியில் பயணிப்பேன்' என்கிறாரே சீமான், 2026ல் நா.த.க தலைமையில் கூட்டணி அமையுமா?
நாம் தமிழர் கட்சி யார் தலைமையையும் ஏற்றுப்போக வாய்ப்பில்லை. நாம் தமிழர் கட்சியை ஏற்றுக்கொண்டு இந்த மண்ணுக்கான, மக்களுக்கான அழைப்பு வருகிறது என்றால் வரவேற்போம். பா.ம.க.வோ, வி.சி.க.வோ, நா.த.க.வை ஏற்று வருவதற்கு இந்த தேர்தலில் சூழல் இல்லை. வருங்காலத்தில் அமையலாம்.
(கட்டுரையாளர்: அ.கண்ணதாசன் / குமுதம் ரிப்போர்ட்டர் / 15.07.2025)
(நேர்காணல் குறித்த முழுத்தொகுப்பினை காண, குமுதம் ரிப்போர்ட்டர் இதழை வாங்கி படியுங்கள்)
What's Your Reaction?






