brinjal farming profit: காலமெல்லாம் கத்தரி விவசாயம்.. அரை ஏக்கரில் தினமும் 500 ரூபாய் லாபம்!

எந்த காலத்திலும் விவசாயிகளுக்கு கைக்கொடுக்கும் பயிராக கத்தரிக்காய் திகழ்வதாக சொல்கிறார் பெண் விவசாயி செல்லம்மாள். இதுக்குறித்து குமுதம் மண்வாசனை இதழுக்காக அவர் அளித்த நேர்க்காணல் விவரம் பின்வருமாறு-

May 5, 2025 - 10:35
brinjal farming profit: காலமெல்லாம் கத்தரி விவசாயம்.. அரை ஏக்கரில் தினமும் 500 ரூபாய் லாபம்!
brinjal farming profit

brinjal farming profit: ஆடி மாசமாக இருந்தாலும் சரி , சித்திரை மாசத்து வெயிலா இருந்தாலும் சரி, ஐப்பசி மாசத்து மழையா  இருந்தாலும் சரி, மார்கழி  மாசத்து பனியா இருந்தாலும் சரி, சுமாரான தண்ணி இருந்தா  போதும் கத்தரிக்காய் விவசாயம் எல்லா காலத்திலயும் நல்லா விளைவிக்கலாம். மோட்டார் பம்புசெட்டில் உட்கார்ந்து கொண்டு சந்தோசமாக பேசுகிறார், செல்லம்மாள். 

கரூர் அருகே வேலம்பாடி கிராமத்தில் காலமெல்லாம் கத்தரிக்காய் பயிரிடும் செல்லம்மாள் தோட்டத்தில் கத்தரி  செடிகள் அனைத்துமே பச்சை பசேல் என காட்சியளித்துக் கொண்டிருந்தன. 

“அரை ஏக்கரில் பெரும்பாலும் கத்தரிக்காய் பயிரிடுவேன். என் தோட்டத்தில் அனைத்துக் காய்கறியும் பயிரிட்டு தினமும் மார்க்கெட்டில் விற்று லாபம் பார்ப்பேன். முருங்கையும் பயிரிட்டுள்ளேன். கத்தரியையும், முருங்கையும் தினமும் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் கத்தரிதான் முதலில் விற்கிறது. அதிகம் விளைச்சல் இருந்தால் 30 கிலோ எடையுள்ள பை குறைந்த பட்சம் 500 ரூபாய்க்கும் அதிக பட்சம் 800 ரூபாய்க்கும் விற்பேன். சராசரியாக நாள் கணக்கு போட்டால் செலவெல்லாம் போக அரை ஏக்கரில் தினமும் 500 ரூபாய் வருமானம் வரும் விவசாயம்தான் கத்தரி விவசாயம்” என்கிறார் செல்லம்மாள்.

சமையல்களில் கத்தரிக்காய்-க்கு நல்ல மவுசு:

காய்கறிகளிலேயே அனைவருக்கும் பிடித்த காய் கத்தரிக்காய்தான். அதுவும் இந்தப் பச்சை கத்தரிக்காயை அதிகம் விரும்பி வாங்குவார்கள். இந்தப் பச்சை கத்தரிக்காயில்தான் ருசி அதிகம். கத்தரிக்காய்  சேர்த்து சாம்பார் வைத்தால் தான் குழம்பு  கெட்டியாக இருக்கும். அது மட்டுமல்ல ருசியாகவும் இருக்கும். பருப்புடன் சேர்த்து குழம்பு வைத்தால் அதன் ருசியே தனிதான். அந்தப் பருப்புக்கு கத்தரிக்காயை ஜோடி சேர்த்தால்தான் கல்யாண  விருந்து மணமணக்கும். பருப்புடன் சேர்த்தாலும் சரி, பயிர்களான, பாசிப்பயிறு, மொச்சைபயிறு, தட்டைபயிறுடன் சேர்த்தாலும் சரி, கத்தரிக்காய் குழம்பு மணக்கும் ருசிக்கும்.

பாய் வீட்டு கல்யாண விருந்தில் பரிமாறும் பிரியாணிக்குக் கூட, கத்தரிக்காய் போட்ட தால்சாவும், கத்தரிக்காய் பச்சடியும் சைடிஸ்ஸாக பரிமாறுவார்கள். முழு கத்தரிக்காயில் செய்யும் எண்ணெய் குழம்பு மறுசாப்பாட்டிற்கு பிறகும் மீண்டும் ஒருமுறை சாப்பாடு கேட்டு வாங்கத் தூண்டும். கத்தரிக்காயில் விதவிதமாக பதார்த்தம் செய்தாலும் இன்றுவரை கிராமத்து விசேஷங்களில் மணப்பது கத்தரிக்காயுடன் முருங்கைகாய் போட்டு வைக்கும் சாம்பார்தான். கத்தரிக்காய் பஜ்ஜி செய்து சூடாக சட்னி வைத்துச் சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். 

“நான் அரை ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிட்டு  இப்போது அந்தச் செடிகள் காய்வரத்து வந்து- கொண்டிருக்கிறது. காலையில்தான் காய் பறித்துவிட்டு மார்க்- கெட்டில் போட்டுவிட்டு வருகிறேன் அதனால் செடியில் காய் இல்லை’’ என்று சொல்லிவிட்டு ஒரு செடியிலிருந்த சில பிஞ்சு கத்தரிக்காய்களை நம்மிடம் காட்டிவிட்டுப் பேசினார்.

Read more: நெல்லையப்பர் ரகத்தை மீட்டதில் மகிழ்ச்சி- உழத்தி லட்சுமிதேவி.. சிறப்பு நேர்காணல்

யூரியா வைத்தால் தான் காய் வரும்:

“முதலில் டிராக்டரால் நிலத்தை ஆழமாக  உழுது, அதன் பிறகு  எருது உரம் போட்டு மீண்டும் நிலத்தை உழவேண்டும். பிறகு 2 அடி அகலத்திற்கு பாத்தி எடுத்து கத்தரிக்காய் நாற்றுகளை நடவேண்டும். நாற்றுகளை நானே தயார் செய்துகொள்வேன். நல்ல தரமான காய்களின் விதைகளை எடுத்து நானே நாற்றுவிட்டுக் கொள்வேன். கரூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் போன்ற ஊர்களில் கத்தரிவிதை கிடைக்கிறது. அக்ரி ஆபீசிலும் கொடுக்கிறார்கள். என்னுடைய கத்தரி செடி வளர கிணற்றுப் பாசனம்தான். தேவைக்கேற்ப கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவேன். செடி ஒரு மாதம் ஆன நிலையில் களை எடுத்தால் போதும். சிலர் இயற்கை விவசாயம் என்பார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. நான் கத்தரி செடிக்கு யூரியா வைப்பேன். இப்போதுள்ள காலச் சூழ்நிலையில், பருவம் மாறிப் பெய்யும் மழையாலும் யூரியா வைத்தால்தான் காய் அதிகமாக காய்க்கும். ”

நாத்து நட்டு சரியாக 60 முதல் 70-வது நாளில் காய் பறிக்க ஆரம்பிக்கலாம். தோட்டத்தை நான்கு பிரிவாகப் பிரித்து தினமும் ஒரு பகுதியில் காய் பறிப்பேன். தினமும் 30 முதல் 50 கிலோ காய் பறிக்க முடியும். அடுத்து அடுத்து மற்ற இரண்டு பகுதியிலும் காய் பறிப்பதற்குள் முதலில் காய் பறித்த பகுதியில் மீண்டும் காய் வந்துவிடும். இப்படியே தினமும் காய் பறிக்கலாம். ஒரு சில இயற்கை மாறுதல்களால் 15 நாட்கள் காய் வராமல் இருந்தாலும் பிறகு நிச்சயம் காய் வந்துவிடும். காலையில் பறிக்கும் காய்களை பள்ளபட்டி உழவர் சந்தை, அரவக்குறிச்சி, ஆண்டிபட்டிக்கோட்டை, ஈசந்தத்தம் பகுதிகளில் நடக்கும் வாரச்சந்தைகளில் விற்பேன். மொத்தமாகக் கேட்டால் 30 கிலோ உள்ள பை ஒன்றுக்கு 500 ரூபாய்க்கு குறைவில்லாமல் விற்பேன். கிலோ 20 ரூபாய்க்கு குறைவில்லாமல் போகும். இப்போது மொத்த விலைக்கு கிலோ 20 ரூபாய்க்கு விற்கிறது. சில்லறை மார்க்கெட்டில் கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். நானும் அப்படித்தான் விற்பேன். கத்தரிக்காய் தேவை அனைத்து மாதங்களிலும் இருக்கும். அதுவும் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, ஐயப்பன் சீசனில் அதிகம் இருக்கும்.

மழைநீர் தாய்ப்பால் போன்றது:

இந்த ஆடியில் ஒரு மழை பெய்து இருக்கிறது. என்னதான் கிணற்றுத் தண்ணீர் பாய்ச்சினாலும், மழை நீர் தாய்ப்பால் போன்றது. அடிக்கடி மழை பெய்தால் கத்தரிக்காய் விளைச்சல் இன்னும் நன்றாக இருக்கும். கடந்த 5 மாதமாக மழையே இல்லை. கிணற்றுத் தண்ணீரை வைத்தே இந்தக் கத்தரிக்காய் செடியைக் காயவிடாமல் காய் பறித்து லாபம் பார்த்து வருகிறேன். அரை ஏக்கருக்கு கத்திரிக்காய் விவசாயம் செய்ய, உழவு ஓட்டுவது, களை பறிப்பது நாற்று நடுவது என 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். விவசாயிகளிடம் செலவுக்கான புள்ளி விவரக் கணக்கு கேட்டால் தெரியாது. உழுபவன் கணக்கு போட்டால் உழவுக்கு கூட மிஞ்சாது. அதனால் குத்து மதிப்பாக பத்தாயிரம் ரூபாய் செலவாகும். காய் பறிக்க ஆள் விடக்கூடாது. நாமே பறித்தால்தால் லாபம் கிடைக்கும்.

Read more: யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயம்- அசத்தும் நத்தம் விவசாயி

ஆள் விட்டால் அவர் 200 ரூபாய் கேட்பார் அதனால் கட்டுபடியாகாது. எப்படி பார்த்தாலும் செலவெல்லாம் போக தினமும் 500 ரூபாய் வருமானம் வரும். காலத்திற்கும் மாறாத கத்தரிக்காய் விவசாயம் செய்தால் நிச்சயம் நம்மைக் காப்பாற்றும்’’ என்கிறார், செல்லம்மாள்.

கட்டுரை: கரூர் அரவிந்த் (குமுதம் மண்வாசனை இதழ், 01.05.2025 )

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow