அடிக்கடி ஆப்சென்ட் ஆகும் உதயநிதி.. சலசலப்பில் திமுக அறிவாலயம்
தமிழகத்தின் துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளராருமான உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக கட்சி ரீதியிலான முக்கிய கூட்டங்களில் ஆப்சென்ட் ஆவது திமுக நிர்வாகிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஒருபுறம் வருகிற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலினை மனதில் வைத்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-பாஜக உடன் கூட்டணி என பகிரங்கமாக தற்போதே அறிவித்து தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில், திமுகவின் அடுத்த தலைவர் என பார்க்கப்படும் உதயநிதி தொடர்ந்து சில முக்கியமான நிகழ்வுகளில் ஆப்சென்ட் ஆகி வருவது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி சனிக்கிழமை காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள் உட்பட, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் சீனியர்கள் எல்லோரும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது கட்சி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அப்படியான கூட்டத்திலேயே, திமுகவின் அடுத்த தலைவராக கருதப்படும் உதயநிதி ஆப்சென்ட் ஆகியுள்ளார்.
உதயநிதி ஆப்சென்ட் ஆனதற்கு காரணம், வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என விஷயமறிந்த அறிவாலயத் தரப்பினர் கூறுகின்றனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் நிறைவில், வருகிற ஜுன் 1 ஆம் தேதி திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை, உத்தங்குடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை என பார்த்தால், அன்றைய தினம் மாலை சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கான “மாநில சுயாட்சி நாயகரே” பாராட்டு விழாவிலும் உதயநிதி கலந்துக்கொள்ளாமல் தவிர்த்திருப்பது கட்சி நிர்வாகிகளிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
பாராட்டு விழா தொடர்பாக வீடியோ ஒன்றினை முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை ரீ-ட்வீட் மட்டும் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். சமீப நாட்களாகவே உதயநிதி சைலண்ட் மோடில் தான் இருக்கிறார். உதயநிதி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதும் ரொம்பவே குறைந்துள்ளது. அரசியலில் குதித்துள்ள விஜய் ரோட் ஷோ, வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் என அடிக்கடி செய்திகளில் தலைக்காட்டிய வண்ணம் இருக்கும் நிலையில் உதயநிதியின் சைலண்ட் மோட் திமுகவினர் மத்தியில் கொஞ்சம் கவலையினை உண்டாக்கியுள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
What's Your Reaction?






