விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்? தாக்கலாகும் 3 மசோதாகள்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவிலேயே 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை எனவும், அதனால் ஜனநாயகம் தோற்றுவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்து வருகின்றனர்.
என்னத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதில் மத்திய அரசு தீர்க்கமாக இருக்கிறது. அதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது.
பல்வேறு கட்டாய் ஆய்வுகளுக்கு பிறகு ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு செய்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதாவது, இந்த குழுவின் பரிந்துரைகளின் படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83-வது, 172-வது பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளதால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மோடி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.
அதுமட்டுமல்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் மத்திய அரசுக்கு உள்ளன.
இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், முதல் மசோதா கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனுடன், உள்ளாட்சித் தோ்தல்களுக்கு மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஆலோசித்து வாக்காளா் பட்டியலை தயாரிப்பது தொடா்பாக 2வது மசோதாவும், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை பதவிக் காலத்தை பிற மாநில சட்டப்பேரவைகள், மக்களவை பதவிக் காலத்துடன் இணைக்கும் வகையில் 3வது மசாதோவும் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மசோதாக்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் விரைவிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?