கலாசார Contentகளை உருவாக்குங்கள்! படைப்பாளிகளுக்கு விருதளித்து பிரதமர் அறிவுரை..

டிஜிட்டல் படைப்பாளர்கள்தான் இந்திய நாட்டின் தொழில்நுட்ப தூதர்கள் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

Mar 8, 2024 - 13:58
கலாசார Contentகளை உருவாக்குங்கள்! படைப்பாளிகளுக்கு விருதளித்து பிரதமர் அறிவுரை..

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்த தேசிய படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில், நாட்டின் இளம் படைப்பாளர்களுக்கு விருதளித்த பிரதமர் மோடி, இந்திய படைப்புகளை உலக அரங்கில் ஒளிரச்செய்ய வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். 

நாட்டின் முதல் தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி, இளம் டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய நாட்டின் கலாசாரத்தை உலக அரங்கில் ஒளிரச்செய்ய வேண்டிய பொறுப்பு, டிஜிட்டல் தூதர்களான டிஜிட்டல் படைப்பாளிகளிடமே இருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து, உலகத்தின் எந்த மூலையையும் நொடியில் அணுக முடிந்த டிஜிட்டல் படைப்பாளிகளால் நம் நாடு சந்திக்கும் சவால்கள் மற்றும் மேற்கொண்டுள்ள முதன்மை நடவடிக்கைகளை உலகத்திற்கு பறைசாற்ற முடியும் எனக் கூறினார். சாதாரண மொபைல் போன்களில் தொடங்கி, அசாதாரன தகவல் பரிமாற்றங்கள் வரை டிஜிட்டல் யுகத்தில் இந்தியா வளர்ந்துள்ளதன் பெருமை, நாட்டின் இளைஞர்களையே சேரும் எனவும் அவர் பாராட்டினார்.

நாட்டு மக்கள் மத்தியில் அரசின் நலத்திட்டங்களையும் டிஜிட்டல் படைப்பாளிகள் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கியதில், ஒன்றரை லட்சம் பேர் பரிந்துரைக்கப்பட்டு, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்ததன் அடிப்படையில் 23 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதில், தூய்மை இந்தியா தூதர் விருது, புதிய இந்தியா பரப்புரையாளர் விருது, தொழில்நுட்ப படைப்பாளி விருது, உயர் படைப்பாற்றல் மிக்கவர் விருது என 20 துறைகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், கலாசார தூதர் விருதை பாடகி மைதிலி தாகூர் பெற்றார். அதேபோல் சிறந்த கல்வி சார் படைப்பை வழங்கியவராக நமன் தேஷ்முக் விருதளிக்கப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow