‘டோரதி’-க்கு எதிரான விமர்சனம்… படத்த பாத்துட்டு பேசுங்க.. மதுரையிலே கார்த்திக் சுப்பராஜ் பதிலடி..!

 ‘டோரதி’ படத்தைச் சுற்றி எழுந்துள்ள விவாதம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

Sep 28, 2026 - 13:45
‘டோரதி’-க்கு எதிரான விமர்சனம்… படத்த பாத்துட்டு பேசுங்க.. மதுரையிலே கார்த்திக் சுப்பராஜ் பதிலடி..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தைச் சுற்றி சமூக வலைதளங்களில் விவாதங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், மதுரை கூடல் நகர் பகுதியில் உள்ள திரையரங்கில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து ‘டோரதி’ படத்தை பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், படத்தைச் சுற்றி எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் தங்களை பெரிதாக பாதிக்கவில்லை என்று கூறிய அவர், படத்தைப் பார்க்காமலேயே சிலர் கருத்துகளை வெளியிடுவதாகத் தெரிவித்தார். அதே நேரத்தில், படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

‘டோரதி’ திரைப்படத்தின் கதை 1990-களின் பின்னணியில் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், படத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட வசனத்தின் நோக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் முன்னேறியிருந்தாலும், அந்த நிலையை அடைய அவர்கள் நீண்ட காலமாக போராட வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஒருவர் பிறப்பால் ஆணாக இருந்து, தனது உணர்வின் அடிப்படையில் பெண்ணாக வாழ விரும்பும்போது, சமூகத்தால் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் ஏராளம் என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறினார். அந்த தடைகளைத் தாண்டி தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கும் திருநங்கைகளின் போராட்டத்தை அவர்களது உணர்வுகளுடன் பதிவு செய்யவே படத்தில் முயற்சி செய்ததாகவும் விளக்கினார்.

மேலும், திருநங்கைகள் தன்னிடம் படத்தைப் பார்த்துவிட்டு தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் படம் அடுத்த தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாது என்றும், மாறாக திருநங்கைகளைப் பற்றிய பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்தான் படத்தை உருவாக்கியதாகவும் கூறினார்.

அன்றாட வாழ்க்கையில் சாலைகளில் பார்க்கும் திருநங்கைகளை சிலர் மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை என்றும், அவர்களின் வாழ்க்கை பிச்சை எடுப்பது அல்லது சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவது போன்ற சூழல்களுடன் மட்டுமே பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கும் மற்றவர்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை படத்தின் மூலம் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

திருநங்கைகள் குறித்த புரிதல் நம் சமூகத்தில் புதிதல்ல என்றும், புராண காலம் முதலே மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த குறிப்புகள் இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் சுட்டிக்காட்டினார். ஆனால், குடும்பத்திலிருந்தே வெளியேற்றப்படுவது, வன்முறைக்கு ஆளாவது உள்ளிட்ட பல்வேறு அநீதிகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“திருநங்கைகள் கடவுளின் ஸ்பெஷல் படைப்பு. ஆனால் அவர்களால் வாழவே முடியாத சூழலை உருவாக்குவது ஒரு வகையான வன்முறைதான்” என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

மேலும், திருநங்கைகள் குறித்த திரைப்படம் எடுக்கவே கூடாது என்று கூறுவது யாருடைய பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ‘டோரதி’ விவாதிக்கப்பட வேண்டிய திரைப்படம் என்றும், அந்த விவாதத்தின் மூலம் சமூகத்தில் ஒரு நல்ல தீர்வு உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் கிளைமாக்ஸ் குறித்தும் பேசிய கார்த்திக் சுப்புராஜ், அது வழக்கமான முறையில் முடிந்திருந்தால் அது தனது பாணியிலான படமாக இருந்திருக்காது என்று குறிப்பிட்டார். அதேபோல், ‘கல்யாண விருந்து’ பாடலுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் போலவே, ‘முத்து மணி’ பாடல் தொடங்கும் நேரத்திலும் திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பார்க்க முடிகிறது என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow