நேரு & செ.பா-க்கு செக்..? க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்..! டெல்லிக்கு பறந்த ஃபைல்ஸ்!

தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வில் தி.மு.க. ஈடுபட்டிருக்கும் நேரத்தில், மத்திய அரசும் தவெக அரசும் திமுக மாஜிக்களின் கடந்த கால ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டன என்பதுதான் ஹாட் டாபிக். 

நேரு & செ.பா-க்கு செக்..? க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்..! டெல்லிக்கு பறந்த ஃபைல்ஸ்!

திமுக, அதிமுக இரு தரப்புக்கும் பொது எதிரி விஜய், முதல்கட்டமாக அவர் திமுக மீதான பிடியை இறுக்க நினைக்கிறார் என்றும், அதேசமயம், ஆட்சிக்கு வந்ததுமே ரெய்டு, கைது என்று திமுகவை டீல் செய்ய அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அதற்காக திமுகவை விட்டுப்பிடிக்கவும் அவர் தயாராக இல்லை என்பதால், மாறாக டெல்லிக்கு வழிவிட்டு தள்ளி நிற்கிறார் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, கடந்த திமுக ஆட்சியில் முக்கிய முகங்களின் ஊழல்கள், சொத்துக்குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு, அயல்நாட்டு முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசு விவரங்களை சேகரித்துக்கொண்டிருப்பது விஜய்யின் கவனத்துக்கு வந்துள்ளதாம்.

தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே பாஜகவின் அண்ணாமலை சில புகார்களை வெளிப்படுத்தினார். ஆனால், திமுக கையில் அதிகாரம் இருந்ததால், அதுதொடர்பான ஆதாரங்களை எடுக்க முடியவில்லை. இப்போது தவெ.க கையில் அதிகாரம் இருப்பதால், ஒவ்வொரு துறையிலும் இருந்து போதுமான ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, 'கட்சி நிதி எனும் பெயரில் நகராட்சி நிர்வாகத் துறையில் 1020 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அந்த ஃபைலை இப்போது வலுவாக தோண்டத் துவங்கியுள்ளது அமலாக்கத்துறை என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

அடுத்ததாக செந்தில்பாலாஜி மீதான 397 கோடி ரூபாய் மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் வழக்கு விசாரணையையும் சி.பி.ஐ. கையில் எடுத்துள்ளதாம். மின்சாரத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த காலத்தில் 26,500 டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதில் மேல்நடவடிக்கையாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழலில் தொடர்புடைய மின்வாரிய அலுவலர் காசி என்பவரை தவெ.க அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆரம்பகட்ட விசாரணையை சி.பி.ஐ துவக்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக அந்த துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இதே வழியில் கனிமவளம், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை. உயர்கல்வி, தொழில்துறை என பணம் கொழித்த துறைகள் அனைத்தும் நுணுக்கமாக ஸ்கேன் செய்யப்படுகின்றன. இத்துறையின் மாஜிக்களை இறுக்கினாலே மேலிட பிரமுகர்கள் வரை சிக்குவார்கள் என்று தவெக அரசு நினைக்கிறதாம். அதனால், முதலில் மத்திய அரசு ஒரு ரவுண்டு ரெய்டு நடத்தட்டும். அதன் பிறகு நமது ஆட்டத்தை தொடங்கலாம் என விஜய் தீர்மானித்திருக்கிறார் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னணியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பிளான்தான் பிரதானம் என்கிறார்கள். முதல்வரின் சமீபத்திய டெல்லி விசிட்டில், பிரதமர் அப்பாயின்ட்மென்ட்க்கு பிறகு அமலாக்கத்துறை தரப்பிலிருந்து இரு முக்கிய அதிகாரிகள் முதல்வர் தரப்பை சத்தமில்லாமல் சந்தித்தாக சொல்லப்படுகிறது. எனவே, கூடிய விரைவில் தமிழகத்தில் ரெய்டுகள் வேகமெடுக்கும் என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow