மின்சார உதடுகள்-காதல் நியூரான்

"மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மின்சார உதடுகள்-காதல் நியூரான்
மாலைமதி

14.காதல் நியூரான்

சலீம் ஐந்து நாட்கள் முன்பு வெள்ளியன்று (ஆகஸ்ட் 22, 2025 ல்) கேம்பிரிட்ஜ் சென்று இருந்தான். ”பண்ணிய குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டு சரணடைந்துவிடுகிறேன். அதற்கு முன்பு ஒரே ஒரு முறை உன்னிடம் பேசிவிட்டுப் போகிறேன்" என்று சில்வியாவிடம் மன்றாடி ஒப்புக்கொள்ள வைத்திருந்தான்.

அடுத்த நாள், 8 மணிக்கு நூலகத்தில் சந்திப்பதற்கு முன்பு அவனுக்கு இன்னொரு ஐடியா தோன்றியது. 'அந்த சில்வியாவை முடித்துவிட்டு, இன்னொரு சில்வியாவைப் பல தலைமுறைகளில் தேடி எடுத்து, அதன்பிறகு அவளுடைய கான்ஷியஸ்னெஸ்ஸை இன்ஸ்டால் பண்ணினால் என்ன, ஜஸ்ட் லைக் சீட்டா போல' என்று தோன்றியது.
"பில் பிரைசன் எழுதியிருக்கிறார், ட்ரில்லியன் கணக்கான அணுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் இணைந்து ஒரு குறிப்பிட்ட வகையில் ஒத்திசைவோடு பணியாற்றிக்கொண்டு இருப்பதை நாம் உடம்பு என்கிறோம்" என்று சில்வியாவிடம் கூறினான்.
"அதெல்லாம் 'அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது!" என்று திருமந்திரம் சொன்னதுதான், சலீம். அதற்காக, அப்படி இணைந்திருக்கிற இன்னொரு 'இருத்தலை' கிலேசப்படச் செய்யலாமா?" என்றாள் சில்வியா.

"என் கண்மணி, 'கிலேசம்' என்பது என்ன? ஒரு எலெக்ட்ரிகல் இம்பல்ஸ்தானே... சற்று நேரத்தில் சரியாகிப் போகிறது!" என்றான் சலீம்,
"தலைவா, அந்தக் கல்யாண வீட்டில் ஒரு பெரியவருடைய டிரில்லியன் அணுக்களைப் பிரித்துவிட்டானே, ஒருத்தன், உன் ஐடியாவின் பேரில்... சொந்த அக்கா கல்யாணத்துல அவ்ளோ கலவரம் பண்ணிட்டியே, நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்றாள் சில்வியா.
"எக்ஸாக்ட்லி சில்வியா! நான் மட்டுமல்ல, நீ கூட மனுஷிக்கு மேலே... என்னிடம் ரேடியோ ஃப்ரீக்வன்ஸி போல ஜீன் கோடு இன்புட் கொடுத்தால் அலசி, தலைமுறைகளில் அதே அடாமிக் காம்பினேஷன் இருக்கிற ஆள் எங்கு இருக்கிறான் என்று கண்டுபிடிக்கிற கருவி இருக்கிறது. உன்னிடம் அந்த பாடியைக் கொண்டு வந்தால் தேவையான மைண்ட் இன்ஸ்டால் பண்ணுகிற 'மின்சார உதடுகள்' இருக்கிறது.”
“எங்கே கண்டுபிடிச்சே இந்தப் பெயரை! நன்றாக இருக்கிறது."

"யோசிச்சுப் பார் என் லட்டு, நீ மட்டும் ஒப்புக்கொண்டாய் என்றால், நம்மால் நமக்குத் தேவையானவங்களுக்கு நாம நினைக்கிற மெமரியை ஏற்படுத்தித்தர முடியும். உதாரணமா, ஊட்டி போகாத ஒருத்தன் மூளையில் பொட்டானிகல் கார்டனில் படுத்துக்கிட்டே பொட்டுக்கடலை சாப்பிடுகிற ஐடியாவை மெமரியில் ஏற்றமுடியும். இன்னும் கொஞ்சம் விபரீதமாக யோசிச்சுப் பாரு.. உக்ரைன் மாதிரி நாட்டுல புடின்க்கு புடிச்சவங்களைப் பல மடங்கா இன்க்ரீஸ் பண்ண முடியும். யாருக்கு யார் ஓட்டுப் போடுவாங்க என்பதை 'மின்சார உதடுகளால்' இன்ஸ்டால் பண்ண முடியும்.

ஏற்கனவே, நைஜீரியாவில் ஒரு டிக்டேட்டர்கிட்ட லம்ப்சம் பேசி வச்சிருக்கேன். ஆப்பிரிக்காவில் மட்டும் அவனோட ஃப்ராஞ்ச்சைஸ்... ஒரு உடைஞ்ச ஹெல்மட்டை வெச்சு உலகத்தையே விலைக்கு வாங்கறேன்றேன்... மக்கர் பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி 'மக்கு பிளாஸ்த்ரி?" காதலில் செல்லமாகத் திட்டினான், சலீம்.
'அவன் மூளைக்குள் இருக்கிற காதல் நியூரான்களை டெலிட் பண்ணிவிட்டால் என்ன? என்றுகூட சில்வியாவிற்குத் தோன்றியது.
சில்வியா பல இடங்களில் வந்து போவதால் இந்த சில்வியா, எந்த சில்வியா என்று தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது. நாளைக்கு மஹிமாவோடு கிறிஸ் நிபாயரைப் பற்றிப் பேசிக்கொண்டு நடக்கும் சில்வியாதான்.
இவ்வளவும் அமெரிக்காவில் நடந்துகொண்டு இருக்கும்போது, வேறொரு இடத்திற்கு வேறு ஒரு நேரத்தில் நாம் பயணிக்க இருக்கிறோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow