விஜய்க்கு சொந்த யோசனை கிடையாது.. விளாசித் தள்ளும் பழ.கருப்பையா
தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான பழ.கருப்பையா குமுதம் குழுமத்தின் ‘ரிப்போர்ட்டர்’ இதழுக்காக சமகால அரசியல் சூழல் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். நேர்காணலின் அம்சங்கள் பின்வருமாறு-

தி.மு.க,அ.தி.மு.க.,ம.தி.மு.க.,காங்கிரஸ்.,ம.நீ.ம. என பழ.கருப்பையாவின் பாதம் படாத கட்சிகளே இல்லை. தற்போது தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருபவரிடம், சமகால அரசியல் சூழல் குறித்த பல்வேறு கேள்விக்கு பழ.கருப்பையா அளித்த பதில்கள் பின்வருமாறு.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மீது நீதிமன்றம் கடுமை காட்டியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எல்லோரும் குற்றவாளிகள். தனது தாயின் தாலியை அடமானம் வைத்து தேர்வு எழுத போனவர்தான் துரைமுருகன். அவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது? 2002ல் துரைமுருகன் மீது போடப்பட்ட வழக்கு இப்போது வரை முடிவுக்கு வரவில்லை. சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும், அரசியல்வாதிகள் சிறைக்குப் போவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். மற்ற வழக்குகளை ஒத்திவைத்துவிட்டு அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் உடனே விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
நான்காம் ஆண்டை நிறைவு செய்யும் தி.மு.க. ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன?
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பதைப்போல இருக்கிறது தி.மு.க. அரசு. சிறைக்கு போனவரை மந்திரி ஆக்குகிறார்கள். நாள்தோறும் கொலைகள் பெருகுகின்றன. எடப்பாடி ஆட்சி செய்த வரை தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் கோடி கடனை பெருக்கி இருக்கிறார்கள். ‘இலவச பயணம் கொடுக்கிறேன், ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன்’ என்று கடனை அதிகப்படுத்திக்கொண்டே போனால், அதையெல்லாம் உங்கள் சொந்த பணத்தில் கட்டுவீர்களா?
அம்பேத்கர் காலத்தில்கூட குளத்தில் தண்ணீர் எடுக்காதே என்றுதான் சொன்னானே தவிர, மலத்தை குடிநீரில் கலக்கும் கொடுமை இல்லை. திருமாவளவனுக்கு வேங்கை வயல் முக்கியமில்லை. இரண்டு சீட் தான் முக்கியம். சாம்சங் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் அரசுக்கு ஆதரவாகத்தான் நிற்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் கண்டித்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறாரே?
ஆர்.என்.ரவி ஒரு பக்குவமற்றவர். என்னைப் போன்ற நடுநிலைவாதிகள்கூட வெறுக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு இருக்கிறது. அவருக்கு அனுப்பிய 10 தீர்மானங்களுக்கு கையெழுத்துப் போடாமல் வைத்திருந்து, உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறது என்றால் அந்த பதவி எதற்கு? அவர் இல்லாமலேயே துணைவேந்தர்களை நியமிக்கக் கூடிய நிலைமை வந்துவிட்டது. அதன்பிறகும் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறேன், அதற்கு துணை ஜனாதிபதியை அழைப்பேன் என்றால் என்ன அர்த்தம்? ஆளுநருக்கு மரியாதையே இல்லை என்று நினைக்கிறேன். ‘உன்னால் எனக்குத்தான் அசிங்கம்!’ என மத்திய அரசாங்கமாவது சொல்ல வேண்டுமா இல்லையா? இப்படிப்பட்ட ஆளுநரை மத்திய அரசு மாற்றாமல் இருப்பது ஏன்?
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கையில் அமித் ஷா சென்னை வந்து அவசரமாக அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
விஜய்யுடன் எடப்பாடி கூட்டணி வைத்துவிட்டால், நாம் எங்கு தனித்துவிடப்பட்டு விடுவோமோ என்பதாலேயே அவசர அவசரமாக அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்திருக்கிறது. டெல்லிக்குப் போய் தனது நிபந்தனைகளை எல்லாம் எடப்பாடி சொல்லிவிட்டு வந்தார். அதன்பிறகு, வக்ஃபு சட்டத்திருத்தத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கிறார். அதுமட்டுமில்லாமல், ’தனி ஆட்சிதான் அமைப்போம்’ என்றும் எடப்பாடி கூறியிருக்கிறார். ‘கூட்டணி ஆட்சி கிடையாது’ என்று சொல்வதற்கு ஒரு மனவலிமை வேண்டும். அந்த விஷயத்தில் எடப்பாடியை பாராட்டலாம். ஆனால், தி.மு.கவினர் தான் ‘எடப்பாடியின் கையை முறுக்கி பா.ஜ.க. கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைத்தனர்’ என என்னென்னவோ பேசி வருகின்றனர்.
அப்படி என்றால், விருப்பத்துடன்தான் பா.ஜ.கவுடன் எடப்பாடி கூட்டணி வைத்திருக்கிறாரா?
விருப்பம் இல்லைதான். என்ன செய்து தொலைப்பது? விஜய்யோடு சேர வேண்டும் என்றுதான் எடப்பாடி விரும்பினார். ஆனால், விஜய்க்கு சொந்த யோசனையும் கிடையாது. தெளிவான யோசனை உள்ளவரையும் வைத்துக்கொள்வது கிடையாது. பா.ம.கவை ஒழித்துக்கட்டிவிட்டு வந்த ஆள் அங்கு ஆலோசகராக இருக்கிறார். போதாதென ஆதவ் அர்ஜூனா போன்றோர் யதார்த்தத்தைவிட, விஜய்க்கு உற்சாகம் கொடுப்பதை மட்டும் பேசுகின்றனர். விஜய்யும், தான் முதலமைச்சராக வந்துவிடுவோம் என நினைக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணிக்குப் போனால் விஜய்க்கு 40-50 இடங்களைக் கொடுப்பார்கள். அதில் சுமார் 30 தொகுதிகளை விஜய் வெல்ல வாய்ப்பிருக்கிறது. அதைவிட்டு ‘முதல் இரண்டரை ஆண்டு நான் முதலமைச்சர்’ என விஜய் விளங்காமல் பேசி, இன்றைக்கு தனித்து விடப்பட்டிருக்கிறார். கடைசியில் ஏதாவது கோக்குமாக்கு நடந்தால் எடப்பாடியுடன் விஜய்யும் மற்றவர்களும் சேர்ந்து, பா.ஜ.கவுடனான கூட்டணி அறுந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.
2026 தேர்தலில் விஜய் மற்றும் சீமான் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்?
தனித்து நின்றால் விஜய்யால் ஒன்றும் சாதிக்க முடியாது. இனியாவது அவர் சாதுர்யமாக செயல்பட வேண்டும். சினிமா நடிகன் என்பதால் மக்கள் ஆதரவு ஓரளவு கிடைக்கும். சீமானின் 8 சதவிகித ஓட்டில் விஜய் பாதியை சாப்பிடவும் வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில், சீமானுக்கும் பெரிய கொள்கை எதுவும் கிடையாது. இருக்கிறவர்களை எல்லாம் பகைத்துக் கொண்டிருக்கிறார். இவர் மட்டும்தான் தமிழர் என்றும், தமிழ்நாட்டில் இருக்கும் 2 கோடி பேரை தமிழர்களே இல்லை என்றும் சீமான் பேசி வருகிறார். சீமானை எந்தக் கட்சியாவது சேர்த்துக்கொண்டால் அதுவொரு வெட்டிச் சுமைதான்.
(நேர்காணல்/எழுத்து: நவீன் இளங்கோவன்/ குமுதம் ‘ரிப்போர்ட்டர்’ )
முழு நேர்காணலை காண பின்வரும் வீடியோவினை காண்க.
What's Your Reaction?






