ஜெயில்.. அகதி செண்டிமெண்ட்: சசிகுமாரின் ’ஃப்ரீடம்’ திரைப்பட விமர்சனம்!
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஃப்ரீடம்' திரைப்படத்திற்கான குமுதம் விமர்சனம்.

வேலூர் தடுப்புக் காவல் சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களின் நிகழ்வை கதையின் கருவாக எடுத்துக் கொண்டு அதில் கற்பனை கலந்து திரைப்படமாக இயக்கியுள்ளார் சத்யசிவா. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, சசிகுமார் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு சிறிது எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதனை படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? 'ஃப்ரீடம்' திரைப்படத்திற்கான குமுதம் விமர்சனம் இதோ.
இலங்கைத் தமிழ் அகதியான சசி முகுமார், துப்பாக்கி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக வேலூர் கோட்டைக்குள் இருந்த ஒரு சிறப்பு முகாமில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அடைத்து வைக்கப்படுகிறார். ஒரு மலையாளி ஜெயிலரால் அங்கு அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றார்.
பிறந்து ஐந்து வருடமாகியும் தன் குழந்தையையும், மனைவியையும் பார்க்க முடியவில்லையே என்று பெரும் துயரில் இருக்கும் சசிகுமார், அவர்களைப் பார்ப்பதற்கு சட்டத்தின் துணையை நாடுகிறார். சட்டம் அதற்கு அனுமதித்தும், அந்த ஜெயிலர் வேண்டுமென்றே அனுமதிக்காததால், வேறுவழியின்றி குழந்தையையும் மனைவியையும் பார்க்கவும், அவர்களுடன் இலங்கைக்கே திரும்புவதற்கும் முகாமில் இருந்து தப்பிக்கத் திட்டம் போடுகிறார், சசிகுமார். அந்தத் திட்டம் நிறைவேறியதா? சுதந்திரக் காற்றை சசிகுமார் தன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சுவாசித்தாரா? என்பதுதான் கதை.
சசிகுமாரும் மனைவியாக வரும் லிஜோமோல் ஜோசும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கின்றனர். கணவனை மீட்க லிஜோமோல் நடத்தும் போராட்டங்களும், முகாமில் இருந்து தப்பிக்க சசிகுமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சுரங்கம் தோண்டுவதும் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும், காட்சிகள் எதுவும் புதுமையாக, சுவாரஸ்யமாக இல்லாததால் போகப்போக சலிப்பாகிவிடுகிறது.
வக்கீல் மாளவிகா, போலீஸ் ரமேஷ் கன்னா, ஜெயிலர் சுதேவ், போஸ் வெங்கட், முராமசாமி என அனைவரும் நடிப்பில் தங்களால் முடிந்ததைச் செய்திருக்கின்றனர். ஒளிப்பதிவு, இசை ஓகே. இயக்குநர் சத்ய சிவா, முகாமில் நடக்கும் சித்திரவதைகளைக் கொடூரமாகவும் அருவருப்பாகவும் காட்டியிருக்கிறாரே தவிர, எதுவும் இதயத்தைத் தொடவில்லை. திரைக்கதையில் வேகமோ திருப்பமோ இல்லாததால், காலைக் காட்சியிலேயே கண்கள் சொக்கி விடுகின்றன.
'ஃப்ரீடம்' - எஸ்கேப்!
What's Your Reaction?






