திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு...யாருக்கு முக்கியத்துவம்?
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு.
மக்களவை தேர்தலில் களம் காணும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை(மார்ச்-20) வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை(மார்ச்-20) தொடங்குகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன.
அதன்படி திமுக கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். நாமக்கல் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சூரியமூர்த்தி மற்றும் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சச்சிதானந்தமும் போட்டியிடுகின்றனர். சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சிப் பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.
கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக இதுவரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. மக்களவை தேர்தலில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் நாளை (மார்ச் 20) திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?