கைக்கழுவிய திமுக தலைமை... பாஜகவில் இணையும் செ.பா?
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தவெக தரப்பில் இருந்து வழக்குகள் தொடர்பாகவும் நெருக்கடி அதிகரித்து வருவதோடு திமுக தலைமையும் கண்டுக் கொள்ளவில்லை என்பதாலும் பாஜகவில் இணைந்துவிடலாம் என்று ஒரு முடிவுக்கு அவர் வந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குதிரைபேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் சம்மன் வழங்கியது முதல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வைத்தது வரை பல்வேறு நடவடிக்கைகள் தொடர்கிறது. அதுமட்டுமின்றி, அவரது தம்பி அசோக்குமார் தொடங்கி கரூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமானவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
இதனால், தன்னுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு வட்டாரம் முழுவதுமாக பாதிக்கப்படுவதாக செந்தில்பாலாஜி கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பால்யகால நண்பர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், மருத்துவர்கள் என அவருக்கு நெருக்கமானவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் நெருக்கடி கொடுக்கப்படுவதாக அவரது தரப்பில் கருதப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், செந்தில்பாலாஜியை திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என பனையூர் தரப்பில் இருந்து திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. இதையடுத்து, தனது தரப்பு நியாயத்தை முதலமைச்சர் விஜய்யிடம் எடுத்துச் செல்ல செந்தில்பாலாஜி தரப்பில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் செந்தில்பாலாஜியின் அடுத்த அரசியல் நகர்வு குறித்த கேள்வி எழுந்துள்ளது. அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் வழக்குகளில் இருந்து விலக்கு கிடைக்கலாம் என பாஜக தரப்பில் பலமுறை பேசப்பட்டதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஏற்க செந்தில்பாலாஜி அப்போது மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது திமுக தலைமையின் புறக்கணிப்பு மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் நெருக்கடி காரணமாக, அந்த வாய்ப்பை மீண்டும் பரிசீலிக்கலாமா என்ற எண்ணம் செந்தில்பாலாஜியிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியுள்ள நிலையில், பாஜகவில் இணைவதே தன்னை அரசியல் ரீதியாக பாதுகாத்துக்கொள்ளும் வழியாக இருக்கும் என அவரது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பாஜக தரப்பிலும் சில முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுகவால் கைவிடப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது அடுத்த அரசியல் நகர்வாக பாஜகவை நோக்கி நகர்கிறாரா என்பதே தற்போது தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
What's Your Reaction?
