ராகு-கேது தோஷம் நீங்க அருள்பாலிக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் திருத்தலம்!
ஒருவர் வாழ்வில், நல்லது கெட்டது அனைத்துக்கும் நவகிரகங்களே காரணமாகும் என்பது சாஸ்திர உண்மை. இன்றைய விஞ்ஞானத்திலும் கூட பல சமயங்களில் அது ஏற்கப்பட்டுள்ளது.
அந்த நவகிரகங்களிலும் மிக முக்கியமாகக் கருதப்படும் கிரகங்களுள் ராகு கேதுவுக்குத் தனியிடம் உண்டு. ராகு, கேதுவை ஜோதிட சாஸ்திரம் நிழல் கிரகங்கள் என்று சொல்கிறது. சர்ப்ப கிரகங்கள் என்பதால், ராகு கேதுவின் பிடி, மிகவும் வலிமையாக இருக்கும். ஒருவன் ஜாதகத்தில் ராகு-கேது எங்கு அமைகின்றார்களோ அதைப் பொருத்து, அவரது வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் என்பது நம்பிக்கை அத்தகைய நாகர்களுக்கு இந்த ஆலயம் தனி விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
இங்கே வந்து வழிபட்டால், சகலவிதமான நாக தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் கூற்று. கொடுமுடி என்னும் இத்தலத்தில் ஈசன், மகுடேஸ்வரர் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார். ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே, யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர். ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக் கொண்டார். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவில் இருந்து தள்ள முயன்றார். காற்று படுவேகமாக வீசியபோது, மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது.
ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கமாக ஆனது. அந்தச் சமயத்தில் இந்தக் கொடுமுடி தலத்தில் விழுந்த துண்டு, வைரக்கல்லால் ஆன லிங்கமாக மாறி, அதில் இறைவன் குடியேறியதாக தலபுராணம் சொல்கிறது. ஆதிசேஷனால் உருவான தலம் என்பதால் இது, நாகர் ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. நாக தோஷம் நீங்கவேண்டி இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கிப் பலன்பெறுகின்றனர்.
இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனைத் தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் எழுந்தருளியுள்ளார். இந்த வன்னி மரத்தை பிரம்மாவின் இன்னொரு முகமாக சூட்சுமமாக பாவித்துக் கொள்கின்றனர். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்தார். ஆஞ்சநேயர் இங்கே கோரைப்பல்லுடன் காட்சி தருகிறார். சஞ்சீவி மலையைக் கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில் மணி சுட்டப்பட்டுள்ளது. பெருமாள் சந்நதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்கிரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது.
புலியின் காலும் யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இறைவன் இங்கே மகுடேஸ்வரர் மலைக்கொழுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சௌந்தரநாயகி வடிவுடைய நாயகி என்றும் திருப்பெயர்கள்கொண்டு அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தின் வயதைக் சுணக்கிட முடியவில்லை. மிகவும் பழைமையான இந்த மரத்தில் பூப் பூக்கும், ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால், எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழனி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக் காவடி கொண்டு செல்லும்போது, காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளைப் போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாகக் கொண்டு செல்கிறார்கள்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். தேவாரப் பாடல் பெற்ற இருநூற்று எழுபத்து நான்கு சிவாலயங்களில் இது இருநாற்றுப் பத்தாவது தலமாகப் போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களுள் இது ஆறாவது தலம். ராகு-கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத் தடை நீங்குதல், குழந்தைப் பேறு ஆகியவற்றை அடைகின்றனர். நாக தோஷம் நீங்க, வன்னி மரத்தடியில், கல்லால் செய்த நாகரை பிரதிஷ்டை செய்கின்றனர். தார தோஷம் நீங்கிட, கிரக பூஜை செய்து வாழை மரத்திற்குத் தாலி கட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.
கோயிலைச் சுற்றி எங்கும் நாகர் பிரதிஷ்டை நடக்கின்றது. வேப்ப மரமும் அரச மரமும் இணைந்துள்ள மரத்தடியில் உள்ள விநாயகருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றினால் திருமண வரமும் குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவருக்கு எத்தனை வயதோ அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்றுகின்றனர்.
சித்திரைத் திருவிழா பதினொரு நாள்கள் நடக்கின்றது. ஆடிப் பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜைகள் உண்டு. அமாவாசை நாட்களில் இங்கு பித்ரு தர்ப்பணம் செய்ய காவிரிக் கரையில் ஏராளமானோர் கூடுகின்றார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுஷ்ய ஹோமம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் இந்தத் தலத்தில் விசேஷமாக நடத்திக்கொள்கின்றனர்.
அரவு கிரகங்களான ராகு, சேதுவின் அமைப்பினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், இறைவன் அருளினால் சகல நன்மைகளையும் பெற்றிடவும் இயன்றபோது நீங்களும் இத்தலம் சென்று வாருங்கள். உங்கள் வாழ்வில் உன்னதங்கள் நிகழும்:
What's Your Reaction?