சுதந்திர தினம் vs குடியரசு தினம்: முதலமைச்சர், ஆளுநர் கொடியேற்றுவதன் பின்னணி என்ன?

சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவதற்கு பின்னால் இருக்கும் மரபு என்னவாக இருக்கும்? இதனை விரிவாக காண்போம்.

Aug 15, 2026 - 11:25
சுதந்திர தினம் vs குடியரசு தினம்: முதலமைச்சர், ஆளுநர் கொடியேற்றுவதன் பின்னணி என்ன?

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15):

சுதந்திர தினம் என்பது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற நாளாகாகவும், நாம் அனைவரும் இந்த நாளை தேசிய கொடியை ஏற்றி கொண்டாடகிறோம். மக்களின் நேரடிப் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவர்,  அதாவது மத்தியில் பிரதமரும்,மாநிலத்தில் முதலமைச்சரும் சுதந்திர தினந்தன்று தேசியக் கொடியை ஏற்றுகின்றனர்.

குடியரசு தினம் (ஜனவரி 26):

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து பின்பு நாடு குடியரசாக மாறிய நாளாகும். மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக ஆளுநர் இருப்பதால், குடியரசு தினத்தன்று மாநிலங்களில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

1974-க்கு முன்பு இருந்த நடைமுறை :

1974-ம் ஆண்டுக்கு முன்பு வரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களிலுமே மாநிலங்களில் ஆளுநர்கள் தான் தேசியக் கொடியை ஏற்றி வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு சுதந்திர தினத்தன்று மாநிலத் தலைநகரில் கொடியேற்றும் உரிமை வழங்கப்படவில்லை.

முதலமைச்சருக்கு கொடியேற்றும் உரிமை கிடைத்தது எப்படி?

1974 பிப்ரவரியில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதி, மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவரான முதலமைச்சருக்கு சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, மாநிலத் தலைநகரங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றும் நடைமுறை 1974ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அதன்பிறகு மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும், குடியரசு தினத்தன்று ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றும் நடைமுறை தொடர்ந்து வருகிறது.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் நிகழ்வுகளில் உள்ள வேறுபாடு :

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு தேசிய தினங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டாலும், அவற்றின் வரலாற்றுப் பின்னணியும் நிகழ்வு முறையும் வேறுபட்டவை. சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியை ஏற்றிய பின் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். 

மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றுகிறார். அதனைத் தொடர்ந்து நாட்டின் இராணுவ வலிமை மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.

ஏன் இந்த நடைமுறை முக்கியமானது?

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கொடியேற்றுவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை வெளிப்படுத்துகிறது. குடியரசு தினத்தன்று ஆளுநர் கொடியேற்றுவது, அரசியலமைப்பின் கீழ் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக அவர் வகிக்கும் பொறுப்பை பிரதிபலிக்கிறது.

எனவே, சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும், குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவது வெறும் நடைமுறை மட்டுமல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நிர்வாகத் தலைமை மற்றும் அரசியலமைப்புத் தலைமை ஆகியவற்றின் வேறுபாட்டை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான ஜனநாயக மரபாகவும் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow