மதுக்கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு: அரசுக்கு சீனு ராமசாமி வைக்கும் முக்கிய கோரிக்கைகள்!

90 நாள் ஏ.ஏ மறுவாழ்வுக் கொள்கையைத் தமிழக அரசு சட்டமாக்க வேண்டும் எனச் சீனு ராமசாமி கோரியுள்ளார்.

Aug 14, 2026 - 19:08
மதுக்கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு: அரசுக்கு சீனு ராமசாமி வைக்கும் முக்கிய கோரிக்கைகள்!
Seenu Ramasamy

நாளிதழ்களில் வெளியாகும் குடும்ப வன்முறைகள், தெருச்சண்டைகள் மற்றும் விபத்துகளுக்குப் பின்னால் 'மது' எனும் இருண்ட சுழலே பிரதான காரணமாக இருப்பதாகத் இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரை பின்வருமாறு;

நமது ஊர்களில் மாலையானதும் வீடுகளின் கதவுகள் சாத்தப்படும் சத்தம் கேட்கும். ஆனால், அந்த மரக்கதவுகளுக்குப் பின்னால் மனிதர்கள் நிம்மதியாக உறங்க முடிகிறதா என்றால்... அங்கேதான் நமது காலத்தின் மிகப்பெரிய துயரம் அமைதியாக உறைந்திருக்கிறது.

நாளிதழ்களின் நடுப்பக்கத்து விவாதங்களைத் தாண்டி, கடைசிப் பக்கங்களில் மிகச்சிறிய செய்திகளாக வந்து போகும் குடும்ப வன்முறைகளும், தெருச்சண்டைகளும், நடுரோட்டு விபத்துகளும் ஏதோ தவறிப்போய் தற்செயலாக நடக்கும் சம்பவங்கள் அல்ல. அவற்றின் ஆழமான வேர்கள், மனிதர்களின் நிதானத்தையும் சாத்வீகத்தையும் ஒரே அடியில் தகர்க்கும் 'மது' எனும் இருண்ட சுழலில் புதைந்து கிடக்கின்றன.

ஒரு மாலைப் பொழுதில் தெருவில் கேட்கும் அலறல் சத்தமும், ஒரு பெண்ணின் கண்ணீரும், கைக்குழந்தையின் பயந்த கதறலும் வெறும் சத்தங்கள் மட்டுமல்ல; அவை இந்தச் சமூகம் தன் இயல்பு நிலையை இழந்து கொண்டிருக்கிறது என்பதன் எச்சரிக்கை மணிகள்.

தற்போதைய அணுகுமுறை: தண்டனையா? தீர்வா?

இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது நமது சட்டமும் சமூகமும் என்ன செய்கிறது? காவல் துறை வாகனம் வந்து ஒருவரைக் கைது செய்கிறது. சில மணி நேரங்கள் காவல் நிலையத்தின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கிறது; அல்லது ஒரு சிறிய தொகையை அபராதமாக வசூலித்துவிட்டு, "இனிமேல் வீட்டின் பக்கம் போய் கலாட்டா செய்யாதே" என்று எச்சரித்து அனுப்பி வைக்கிறது.

ஆனால், அந்த மனிதன் திரும்பவும் அதே கதவைத் திறந்துதானே தன் வீட்டிற்குள் நுழைகிறான்? அவனது கை, கால்களில் ஊறிப்போயிருக்கும் மதுவின் பிசாசு விலகிவிட்டதா? அவனது மனதிற்குள் உறைந்திருக்கும் அடிமைத்தனம் உடைந்துவிட்டதா? நிச்சயமாக இல்லை.

இங்குதான் நாம் மிகப்பெரிய ஒரு பிழையை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம். 'குடி' என்பது ஒரு மனிதன் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யும் வெறுமனே ஒழுக்கக்கேடான குற்றம் அல்ல; அது உடலையும் மனதையும் ஒரே நேரத்தில் சீரழிக்கும் ஒரு தீராத நோய். 

ஒரு நோயாளியைச் சிறையில் அடைப்பதனாலோ, சவுக்கடி கொடுப்பதனாலோ, காவல் நிலைய மிரட்டல்களாலோ அந்த நோய் குணமாகிவிடாது. நோயுற்ற மனதிற்குத் தேவை தண்டனை அல்ல; அன்பும், மருத்துவமும், கரம்பிடித்து நடத்தும் மனிதப் பரிவும் மட்டுமே.

மேலைநாடுகள் காட்டும் வெளிச்சம்

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மனிதனும் இதே துயரத்தைச் சந்தித்திருக்கிறான். ஆனால், வளர்ந்த சமூகங்கள் அதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு பொது சுகாதாரச் சவாலாக அணுகிய விதம் முற்றிலும் வேறானது:

1. ஆஸ்திரேலியாவின் வழி:

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஒருவன் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்தால் அல்லது தெருவில் இறங்கிப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால், சட்டம் அவனை உடனடியாக ஒரு நோயாளியாகவே பார்க்கிறது. நீதிமன்றம் அவருக்கு 'பாதுகாப்பு உத்தரவு' பிறப்பித்து, குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. அதே நேரத்தில், அவரை வீட்டிலிருந்து தற்காலிகமாக விலக்கி, அரசு அங்கீகரித்த மறுவாழ்வு மையத்திற்குப் கட்டாயமாக அனுப்பி வைக்கிறது. சிகிச்சை முடிந்து அவர் திரும்பிய பிறகும், அவர் மீண்டும் மனிதனாகச் சமூகத்தில் வாழப் பழகிவிட்டார் என்பதைச் சான்றளிக்க ஒரு மனநல ஆலோசகரின் தொடர் கண்காணிப்பு அங்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2. அமெரிக்காவின் '90 நாட்கள்' அதிசயம்:

அமெரிக்காவில் இதற்காகவே இயங்கும் போதை மீட்பு நீதிமன்றங்கள் ஒரு விசித்திரமான, அதே சமயம் அழுத்தமான விதியைப் பின்பற்றுகின்றன. சிறு குற்றங்கள் செய்து பிடிபடும் குடிநோயாளிகளுக்கு அவர்கள் சிறைத் தண்டனை தருவதில்லை. அதற்குப் பதிலாக, "90 நாட்களில் 90 ஏ.ஏ (Alcoholics Anonymous) கூட்டங்கள்" எனும் நிபந்தனையை விதிக்கிறார்கள். 90 நாட்கள் தினமும் மாலையில் போதையில் இருந்து மீண்ட மனிதர்களின் நடுவே போய் உட்கார வேண்டும்; அவர்களின் கதைகளைக் கேட்க வேண்டும். 90 நாட்களும் வருகைப் பதிவில் கையெழுத்துப் பெற்ற பின்னரே அவர்கள் மீதான வழக்கு முற்றிலும் முடிவுக்கு வரும்.

3. ஐரோப்பியச் சமூகங்களின் பரிவு:

சுவீடன், இங்கிலாந்து போன்ற நாடுகளில் குற்றவாளியைச் சிறைக்கு அனுப்பிச் சமுதாயத்திற்குப் பாரமாக்குவதற்குப் பதிலாக, அவரைச் சமூகத்திற்குப் பயனுள்ள வேலைகளைச் செய்ய வைத்து, கூடவே கட்டாய மறுவாழ்வுச் சிகிச்சையையும் வழங்கி மனிதர்களை மீட்டெடுக்கிறார்கள்.

தமிழகத்தின் தேவையும் 'டி.டி.கே - ஏ.ஏ' இணைப்பும்

நமது தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் வழியே அரசுக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கிலான வருமானம் ஒரு பக்கம் இருக்கட்டும்; ஆனால் அதனால் நிம்மதியிழந்து தெருவில் நிற்கும் தாய்மார்களின், முகவரி தொலைக்கும் குழந்தைகளின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது? பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நலிவடைந்து போகும் குடும்பங்களை மீட்டெடுக்க அரசுக்கு ஒரு புதிய தொலைநோக்குப் பார்வை தேவைப்படுகிறது.

இதற்குச் சென்னை டி.டி.கே போன்ற புகழ்பெற்ற மருத்துவமனைகளின் கட்டமைப்புமிக்க மருத்துவச் சிகிச்சையையும், 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' (AA) அமைப்பின் சமுதாயக் கரங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பே சரியான தீர்வாக இருக்கும்.

1. உடலின் நச்சு நீக்குதல்:

குடிப்பதை திடீரென்று நிறுத்தும் ஒரு மனிதனின் உடல் நடுங்கும்; பயத்தில் கதறும்; மனப்பிறழ்வும் வலிப்பும் வரும். அது ஒரு கோரமான விலகல் நிலை (Withdrawal syndrome). சென்னை டி.டி.கே மையம் செய்வது போல, நமது மாவட்ட மற்றும் தாலுகா அரசு தலைமை மருத்துவமனைகளிலேயே 15 முதல் 21 நாட்கள் வரை உள்நோயாளியாகச் சேர்த்து, சிறப்பு மருத்துவர்களின் முன்னிலையில் அந்த நபரின் உடலிலிருக்கும் போதை நச்சை முதலில் அறிவியல் பூர்வமாக வெளியேற்ற வேண்டும்.

2. மனதை மீட்டெடுக்கும் 90 நாட்கள்:

உடலில் இருந்து நச்சு வெளியேறினாலும், மனம் மீண்டும் பழைய கள்ளுக்கடைக்கே ஓடத் துடிக்கும். அங்குதான் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அங்கு மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்; போதையிலிருந்து மீண்ட சாதாரண மனிதர்கள் தங்களின் கண்ணீரையும் மீட்பையும் பேசுவார்கள். மருத்துவமனையிலிருந்து வெளிவரும் நபர், அடுத்த 90 நாட்களுக்குத் தொடர்ந்து தினமும் தனது பகுதி ஏ.ஏ கூட்டத்திற்குச் சென்று வருகைப் பதிவில் கையெழுத்துப் பெறுவதை அரசு சட்டப்பூர்வக் கடமையாக்க வேண்டும்.

அரசுக்கு முன்வைக்கும் முதன்மையான கோரிக்கைகள்

1. சட்டப்பூர்வ 90 நாள் மறுவாழ்வு ஆணை:


குடும்பத்தில் வன்முறை செய்வோர், தெருவில் தகராறு செய்வோருக்குச் சிறைத் தண்டனைக்குப் பதிலாக "15 நாள் கட்டாய மருத்துவ சிகிச்சை + 90 நாட்கள் ஏ.ஏ (AA) கூட்டப் பங்கேற்பு" எனும் மறுவாழ்வு ஆணையை நீதிமன்றங்களும் காவல்துறையும் பிறப்பிக்கச் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

2. இலவச வட்டார மறுவாழ்வு மையங்கள்:

தனியார் மறுவாழ்வு மையங்களின் அதிகப்படியான கட்டணம் ஏழை எளிய மனிதர்களுக்கு எட்டாத ஒன்று. எனவே, ஒவ்வொரு தாலுகா அரசு மருத்துவமனையிலும் இலவச போதை மீட்புப் பிரிவுகளும் மனநலப் பிரிவுகளும் அவசியமாக உருவாக்கப்பட வேண்டும்.

3. சமூகப் பணியாளர்களின் கனிவான கண்காணிப்பு:

சிகிச்சை பெற்ற நபர் மீண்டும் பழைய சூழலுக்குள் வீழ்ந்துவிடாமல் இருக்க, அரசு மனநலச் சமூகப் பணியாளர்கள் மூலம் அவர்களது 90 நாள் வருகைப் பதிவை மாதம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.

4. பாதிக்கப்பட்ட பெண்களுக்கான புகலிடமும் ஆலோசனையும்:

குடியால் வாழ்க்கையைத் தொலைத்து, தினமும் வன்முறையை எதிர்கொண்டு நிற்கும் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் அரசு மருத்துவமனைகள் வழியே இலவச மனநல ஆலோசனையும், சட்டப் பாதுகாப்பும், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

தண்டனைகள் ஒருபோதும் மனிதர்களைத் திருத்தியதாக வரலாறு இல்லை; அவை மனிதனை மேலும் வன்முறையாளனாக மாற்றும் அல்லது சமூகத்தின் முன்னால் கூனிக்குறுக வைக்கும்.

ஒரு மனிதனைச் சிறையில் அடைத்து வைப்பதை விட, அவனை நோயிலிருந்து மீட்டு ஒரு நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, பொறுப்பான குடிமகனாக அவனது குடும்பத்தின் முன் நிறுத்துவதே உண்மையான சமூக நீதி.

'குடி' எனும் பெரு நோயிலிருந்து நம் தமிழகத்தைக் காப்பாற்றவும், ஆயிரக்கணக்கான மனித உயிர்களையும் குடும்பங்களையும் மீட்டெடுக்கவும் இந்த "90 நாட்கள் கட்டாய மறுவாழ்வுக் கொள்கையை" தமிழக அரசு ஒரு முன்னோடிச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும். அதுவே இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் நாம் செய்யும் ஆகப்பெரிய அறமாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow