மலையாள சினிமா நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் ஆபத்துதான்! ஹேமா கமிஷன் அதிர்ச்சி ரிப்போர்ட்

மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள ஹைகோர்ட் நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் அமைத்தது கேரளா அரசு.

Aug 20, 2024 - 10:35
மலையாள சினிமா நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் ஆபத்துதான்! ஹேமா கமிஷன் அதிர்ச்சி ரிப்போர்ட்
hema commission report

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் ரிப்போர்ட் இன்று வெளியானது. இதில் நடிகைகள் மற்றும் பெண்கள் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பல வித சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் மட்டுமின்றி ஆண் கலைஞர்களும் கூட இதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விசாரிக்கக் கேரள அரசு இந்த கமிட்டியை உருவாக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல பகீர் சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்தே இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. 

நடிகை சாரதா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே பி வத்சலா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு தரப்பினரிடம் சென்று விசாரித்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தனர். இந்தக் குழு கடந்த 2019 டிசம்பர் 31ம் தேதியே தனது அறிக்கையைக் கேரள அரசிடம் சமர்ப்பித்தது. இருப்பினும், சில காரணங்களால் இந்த கமிட்டி ரிப்போர்ட் வெளியிடப்படவில்லை. இதற்காகக் கேரள அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த ஹேமா கமிஷன் அறிக்கையில் நடிகைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பாலியல் ரீதியான சுரண்டல்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு வேறு சில பகீர் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது மலையாள சினிமாவில் பெண்கள் மட்டுமின்றி நடிகர்களும் கூட பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மலையாள சினிமாவில் செல்வாக்கு மிக்க ஒரு நெட்வொர்க் இருக்கிறது. இந்த நெட்வொர்க் கட்டுப்பாட்டில் தான் மலையாள சினிமாவே இருக்கிறது. இந்த பவுர்புல் நபர்களைத் தெரியாமல் கோபப்படுத்தும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு  நீண்ட கால தடைகள் விதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. உப்பு சப்பில்லாத காரணங்களுக்காகக் கூட சில ஆண் கலைஞர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அதுவும் எந்தவொரு முகாந்திரமும் இல்லாத வகையில் நீண்ட காலம் பணிபுரியத் தடை விதிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே மலையாள சினிமாவில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பல ஆண் கலைஞர்களும் கூட வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். எங்கு தாங்கள் கூறும் தகவலே சினிமாவில் தங்கள் எதிர்காலத்தைப் பாதித்துவிடுமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால், இதையும் தாண்டி சில ஆண்கள் மலையாள சினிமாவில் உள்ள பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது சந்தோஷத்தைத் தருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெண்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச திரைத்துறையினர் இணைந்து WCC என்ற கமிட்டியை அமைத்துள்ளதும் நல்ல முன்னெடுப்பு என்று இந்த ஆண் கலைஞர்கள் பாராட்டி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னரே இந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்போதும் கூட முழு அறிக்கை வெளியிடப்படவில்லை. முழுமையாக வெளியிட்டால் அது ரிப்போர்ட்டில் இருக்கும் நபர்களின் பிரைவசியை பாதிக்கும் என்பதால் அந்த அறிக்கையின் 233 பக்கங்களை மட்டுமே இப்போது கேரள அரசு வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow