மணிப்பூரில் ஒரு தொகுதிக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல்... என்ன காரணம்..?

அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் - தேர்தல் ஆணையர்

Mar 16, 2024 - 21:38
மணிப்பூரில் ஒரு தொகுதிக்கு மட்டும் 2 கட்டங்களாக தேர்தல்...   என்ன காரணம்..?

வன்முறை காரணமாக மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தேர்தலில் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே கடந்தாண்டு மே மாதம் பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னர் மணிப்பூர், அவுட்டர் மணிப்பூர் என 2 தொகுதிகள் உள்ள நிலையில், இன்னர் மணிப்பூர் முழுவதிலும், அவுட்டர் மணிப்பூரின் சில பகுதிகளில் மட்டும் ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக அவுட்டர் மணிப்பூரின் மீதமுள்ள பகுதிகளில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, முகாம்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் வாக்காளர்கள் முகாம்களில் இருந்து வந்து வாக்களிக்கலாம் எனவும் கூறினார். மணிப்பூர் மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எந்த பிரச்னையாக இருந்தாலும் வாக்கு மூலம் அதனை சரி செய்வோம். அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் ராஜீவ்குமார் கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow