அனுமதியின்றி மஞ்சுவிரட்டுப் போட்டி - காளை முட்டி இளைஞர் பலி
காளை முட்டி மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 30 பேர் காயம்.
திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் நெடுமரத்தில் மலையரசி அம்மன் மற்றும் ஸ்ரீ மங்கச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு 85ம் ஆண்டு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மஞ்சுவிரட்டுப் போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இருப்பினும் கிராமத்தினர் அனுமதியின்றி போட்டியை நடத்தினர்.
இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கொட்டாம்பட்டி அடுத்த சுக்காம்பட்டியைச் சேர்ந்த குமரவேலுவை (19) ஒரு காளை முட்டியது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் கழுத்தில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து குமரவேலுவின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 30 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அனுமதியின்றி மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தியது தொடர்பாக திருப்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?