ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை மகள்...குமரியில் பரபரப்பு..

May 5, 2024 - 20:51
ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை மகள்...குமரியில் பரபரப்பு..

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமியை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழக கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று ( மே 4) எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், கன்னியாகுமரியில் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியை சேர்ந்த பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவை அழைத்துக் கொண்டு தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். இருவரும் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது. 

இதையடுத்து அவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட மீனவர்கள், கடலுக்குள் நீந்தி பிரேமதாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவரது மகள் ஆதிஷாவை மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து புதுக்கடை காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு காவல்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.  விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு சென்ற நிலையில் சிறுமி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow