+2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா.. காஞ்சனா பட பாணியில் டாக்டர் ஆக ஆசை.. அரசு நிறைவேற்றுமா?

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் ஒரே திருநங்கை மாணவியான நிவேதா, தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதியிருப்பதாக கூறியுள்ள நிவேதா, டாக்டர் ஆக விரும்புவதாக கூறியுள்ளார். தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் நிவேதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

May 6, 2024 - 16:10
+2 தேர்வில் சாதித்த திருநங்கை மாணவி நிவேதா.. காஞ்சனா பட பாணியில் டாக்டர் ஆக ஆசை.. அரசு நிறைவேற்றுமா?

தமிழகத்தில் ப்ளஸ் 2 ரிசல்ட் இன்று வெளியானது. 7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 3,25,305 பேர் தேர்வு எழுதினர். அது போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.07 சதவீதம் மாணவியர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.02 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதமும் இரு பாலர் பள்ளிகளில் 94.7 சதவீதமும் பெண்கள் பள்ளிகளில் 96.39 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார்.  சென்னை நடுகுப்பத்தைச் சேர்ந்த நிவேதா லேடி வில்லிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 600-க்கு 283 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நிவேதாவின் இந்த வெற்றி திருநங்கை மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.  

கடந்த 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் நிவேதா இணைந்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார்.
எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை. அவர் படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார்.

பல அவமானங்களைக் கடந்துதான் இந்த வெற்றியை பெற்றுள்ளதாக கூறியுள்ளார் நிவேதா. முதலில் தனக்கு படிக்க இடம் கிடைப்பதே சிரமமாக இருந்து. தனக்காக போராடி இடம் வாங்கிக்கொடுத்தவர்களுக்கு நன்றி. தனது கல்விக்காக உதவி செய்த ஆசிரிய பெருமக்களுக்கு நன்றி கூறினார் நிவேதா. 

பள்ளியில் யாரும் தன்னை திருநங்கையாக பார்க்கவில்லை. அவர்களில் ஒருவராகவே பார்த்தனர். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்து செல்வார்கள். ஆசிரியர்களும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். கற்றுக்கொடுத்தனர் என்று நிவேதா கூறினார்.  நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும் தனது உயர்கல்வி செலவை அரசே ஏற்று உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் நிவேதா.

காஞ்சனா திரைப்படத்தில் திருநங்கை ஒருவர் தனது கல்விக்காக சிரமப்படுவார். அவரை டாக்டருக்கு படிக்க வைப்பார் ராகவா லாரன்ஸ். திருநங்கைகளுக்கு கல்வியின் அவசியத்தையும் அந்த திரைப்படத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பார். இன்றைக்கு பல திருநங்கைகள் உயர்கல்வி படித்து சாதிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

+2 தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிவேதாவிற்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவும், நிவேதாவிற்கு சாதிக்க வேண்டும் என்ற தூண்டுதலையும் உண்டாக்கி கொடுத்துள்ளது. நிவேதாவின் ஆசையை தமிழக முதல்வர் நிறைவேற்றுவாரா பார்க்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow