விளையாட்டு வினையானது.. ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பலியான பெங்களூர் இளைஞர்

விளையாட்டாக செய்யும் காரியங்கள் சில நேரங்களில் வினையாக முடிந்து விடும். பெங்களூரில் நண்பர்கள் ஃப்ராங்க் ஆக செய்த செயல் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. என்னதான் நடந்தது என்று பார்க்கலாம்.

Mar 29, 2024 - 16:05
விளையாட்டு வினையானது.. ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பலியான பெங்களூர் இளைஞர்

பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி பகுதியில் பைக், கார் வாஷிங் சென்டரை நடத்தி வரும் நபர் ஒருவர் அவரது நண்பரின் ஆசனவாயில் உயர் அழுத்த காற்றை செலுத்தி இருக்கிறார். விளையாட்டுதனமாக அவர் செய்த இந்த காரியத்தால் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வயிறு வெடித்து உயிரிழந்த நபரின் பெயர் யோகேஷ் என்பதாகும். தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தனிசந்திராவில் வசித்து வந்த அவர் உணவு டெலிவரி ஏஜெண்டாக வேலை செய்து வந்துள்ளார். அவரது ஆசனக்குழாய் வழியே காற்று அதீத அழுத்தத்தில் உள்ளே உடலில் செலுத்தப்பட்டது.  இதனால் பெருங்குடல் வெடித்து உள் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.

கடந்த மார்ச் 25ஆம் தேதி இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. யோகேஷின் சகோதரியின் திருமணம் விரைவில் நடக்க இருந்தது. இதற்காக அவர் தனது பைக்கை சர்வீஸுக்கு கொடுத்துள்ளார். அப்போது வண்டியை எடுக்க சென்ற போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "அவர்கள் விளையாட்டுதனமாக இதை செய்துள்ளனர். வண்டிகளில் அழுக்கை அகற்றப் பயன்படுத்தப்படும் சாதனத்திலிருந்து உயர் அழுத்தம் கொண்ட காற்றை அவரது முகத்தில் செலுத்தி இருக்கிறார். காற்று படுவேகமாக முகத்தில் அடிக்கவே யோகேஷ் முகத்தை மறைக்க மூடிக் கொண்டுள்ளார். 

இதனால்​​ யோகேஷின் ஆசனவாய் வழியாக முரளி காற்றை செலுத்தி உள்ளார். இதனால் நிலைதடுமாறிய யோகேஷுக்கு கீழே விழுந்து உயிரிழந்தார். குடல் வெடித்து சிதறியதே உயிரிழப்புக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயர் அழுத்தம் கொண்ட காற்று அவரது உடலுக்குள் செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

நமது வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இருக்கும் ஆபத்தான கருவிகளில் விளையாடக்கூடாது என்று பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள். இரண்டு நண்பர்கள் விளையாட்டுதனமாக செய்த காரியம் ஒருவர் உயிரையே பறித்துள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற கருவிகளில் விளையாடக்கூடாது.. இல்லையென்றால் அதுவே விணையாகி போகும் என்று எச்சரிக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow