Tamilnadu : ஒரே ஆண்டில் 4-வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி...என்ன Plan தெரியுமா?

பிரதமரின் தமிழ்நாடு பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது!

Mar 4, 2024 - 08:31
Mar 4, 2024 - 09:47
Tamilnadu : ஒரே ஆண்டில் 4-வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி...என்ன Plan தெரியுமா?

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டம், சென்னையில் பாஜகவின் தாமரை மாநாடு என அடுத்தடுத்து திட்டங்களுடன் ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) தமிழ்நாடு வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். குறிப்பாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி திருப்பூரில் நடந்த என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் திமுகவைக் கடுமையாக விமர்சித்து அரசியல் பிரசாரம் மேற்கொண்டார். 

இந்த நிலையில், இன்று (மார்ச் 4) பிரதமர் மோடி 4-வது முறையாக தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் புதிய மின் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு இன்று மதியம் 2.45 மணிக்கு விமானம் மூலம் தமிழகம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு செல்லும் அவர் கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட விரைவு பெருக்கி உலை திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் சென்னை வரும் அவர், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரை மாநாடு என்ற பொதுக்கூட்டத்தில் மாலை 5 மணி அளவில் பங்கேற்கிறார். இதையடுத்து வழிநெடுகிலும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பளிக்க பாஜகவினர் பிரமாண்ட பேனர்கள் வைத்துள்ளனர். அதிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை முன்னிலைப்படுத்தி ‘மக்கள் காவலன்’ என்ற வாசகத்துடன் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலை, எஸ்.வி.பட்டேல், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட உள்ளதால், மாற்று வழியில் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சில சாலைகளில் செல்ல  தடையும் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 

* மத்திய கைலாஷ் முதல் ஹால்ட் சந்திப்பு வரை
* இந்திராகாந்தி சாலை (ராமாபுரம்) முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை
* மவுண்ட் பூந்தமல்லி சாலை (ராமாபுரம்) முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை
* அசோக்பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை
* விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)
* அண்ணாசலை முதல் மவுண்ட் ரோடு வரை
* தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை

ஆகிய சாலைகளில் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனைகளிலும் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் வேளையில், பிரதமர் மோடியின் இன்றைய தமிழ்நாடு பயணமும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow