"மோடி ஆட்சி தொடர்ந்தால் இனி அவ்வளவுதான்..!" பாஜக அரசை விமர்சித்த கதிர் ஆனந்த்... வீடியோ பதிவு செய்த தேர்தல் அதிகாரிகள்...

Apr 14, 2024 - 15:31
"மோடி ஆட்சி தொடர்ந்தால் இனி அவ்வளவுதான்..!" பாஜக அரசை விமர்சித்த கதிர் ஆனந்த்... வீடியோ பதிவு செய்த தேர்தல் அதிகாரிகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் மோடி ஆட்சி இனி தொடரக்கூடாது என்று வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடுமையாகப் பேசியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உதயேந்திரம் பேரூராட்சியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக  வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றபின் பரப்புரையைத் துவங்கினார்.

அதனைத்தொடர்ந்து, உதயேந்திரம் பேரூராட்சிக்குச் சென்ற வேட்பாளர், அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார். பின்னர் வேட்பாளருக்கு கிரேன் மூலம் பிரம்மாண்டமான மாலையை திமுகவினர் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பரப்புரையில் பேசிய கதிர் ஆனந்த், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.400 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2000 வரை உயர வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “தங்கத்தின் விலை தற்போது 1/2 (கால்) லட்சத்தைத் தாண்டிச் சென்றுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பிரதமர் மோடி ஆட்சி தொடரவே கூடாது” என்று காரசாரமாக விமர்சித்துப் பேசி பரப்புரையில் ஈடுபட்டார்.

அதனைத்தொடர்ந்து மேட்டுத்தெரு, சி.வி.பட்டரை ஆகிய பகுதிகளிலும் கதிர் ஆனந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது சி.வி.பட்டரை கிராமத்து சிறுமி ஒருவர் வேட்பாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பரப்புரைக்கு வரும்போது, கட்சியினரின் வாகனங்களுடன் சேர்ந்து வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கூடியிருந்த பொதுமக்களை வீடியோ எடுத்தபோது, வேட்பாளருடன் வரும் வாகனம் என நினைத்து கிராம மக்கள் கையசைத்தனர். பின்னர் விவரம் தெரிந்து, பொதுமக்களே தாங்கள் செய்ததை நினைத்துச் சிரித்தார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow