நந்தியின் காதில் சொன்னால் நம் வேண்டுதல் சிவனிடம் சேருமா? நந்தியம்பெருமானின் மகிமைகள்!

சிவபெருமானின் வாகனமான நந்தியம்பெருமானின் மகிமைகள், பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் மற்றும் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் ஆன்மீக பலன்களை விளக்குகிறது இந்த பதிவு.

Sep 29, 2026 - 07:00
நந்தியின் காதில் சொன்னால் நம் வேண்டுதல் சிவனிடம் சேருமா? நந்தியம்பெருமானின் மகிமைகள்!

பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி

’என்னடா இவன்... எந்த விஷயத்தைத் தொடங்கினாலும் நந்தி மாதிரி குறுக்கே நிக்கிறான்’ என்று விமர்சனம் செய்வோம். ஆனால், அப்படித் திட்டுவதற்கும் விமர்சிப்பதற்கும் நந்தியை உதாரணமாகச் சொல்லாதீர்கள். நம்முடைய பாவங்களையெல்லாம் போக்கி சிவபெருமானின் பேரருள் கிடைப்பதற்கான மூலகர்த்தாவும் காரணகர்த்தாவுமே நந்திதான் என்று சிவபுராணம் விளக்குகிறது.

எல்லா சிவாலயங்களிலும் உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம் இருக்கும். அங்கே நந்தியம்பெருமானின் திருச்சிலையும் இருக்கும். அதாவது மூலஸ்தானமான கருவறையை நோக்கியபடி, சிவபெருமானைப் பார்த்தபடியே நந்தி இருக்கும். விசா கிடைக்கவேண்டுமென்றால் பாஸ்போர்ட் இருக்கவேண்டும். பாஸ்போர்ட்டாக இருந்து கிளியரன்ஸ் கொடுப்பவராக நந்திதேவர் இருக்கிறார் என்பதுதான் ஐதீகம்!
 
சிவன் கோயிலுக்குப் போகிறோம். நந்தியைப் பார்த்துவிட்டு, சிவ சந்நிதிக்குச் சென்று, அப்படியே தட்சிணாமூர்த்தியையும் துர்கையையும் வணங்கிவிட்டு, நவக்கிரகங்களைச் சுற்றிவிட்டு, கொடிமரத்துக்கு அருகில் வந்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டு வந்துவிடுகிறோம். மற்றபடி பிரதோஷ நன்னாளின் போதுதான் நந்திதேவரைக் கண்டுகொள்கிறோம். அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்கிறோம்.
 
நந்தியம்பெருமானைப் பற்றி இன்னும் இன்னும் விரிவாகப் பார்ப்போமா?
நந்தம் என்றால் நந்தி என்றால் ஆனந்தம் என்று அர்த்தம். ஆனந்ததை வழங்குபவர் என்று பொருள். ஒருவகையில் நந்தியிடம் அனுமதி கிடைத்துத்தான் சிவ தரிசனம் செய்யவேண்டும் என்பது சிவ வழிபாட்டில் மிக மிக முக்கியமானது. ஈசனின் வாகனமான நந்தியைக் குளிர்வித்தால்தான், அவரிடம் அனுமதியையும் ஆசியையும் பெற்றால்தான்,சிவ தரிசனம் என்பதும் சிவ கடாட்சம் என்பதும் நிறைவுறும் என்கிறார் வேதிக் விஜய் சர்மா. எனவே பிரதோஷ காலங்களில் நந்திக்கு அப்ஷேக ஆராதனைகள் நடைபெறுவதைத் தரிசிக்கவேண்டும்; அப்போது மனதாரப் பிரார்த்தனை செய்யவேண்டும். நம்மாலான அர்ச்சனைப்பொருட்களும் அபிஷேகப்பொருட்களும் வழங்கவேண்டும் என பூஜைக்கு உரிய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
 
நந்திதேவரை வணங்கிவிட்டு, நந்தியின் செவியில் நம்முடைய பிரார்த்தனைகளைச் சொல்லி, ‘சிவபெருமான்கிட்ட சொல்லு. என் கஷ்டத்தையெல்லாம் போக்க உதவி செய். எனக்கு ஞானமும் கிடைக்க தென்னாடுடைய சிவனின் அருள் அவசியம். நீதான் சிவன்கிட்ட சொல்லணும்’ என்பது போன்றெல்லாம் வேண்டிக்கொள்கிற பக்தர்கள் இருக்கிறார்கள். வழிபாடுகளில் நியமங்களுக்கு இல்லாமலும் அதேதருணத்தில் நம் மனதுக்கு திருப்தி தருகிற விதத்திலுமாக பிரார்த்தனைகள் பல இருக்கின்றன. அவற்றில் நந்தியின் காதில் சொல்லுகிற கஷ்டப்பட்டியல்களும் ஒருவகை!
 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆத்தூர் எனும் கிராமத்தில், ஸ்ரீமந்தாரவனேஸ்வரர் எனும் திருநாமம் கொண்ட சிவாலயம் உள்ளது. மந்தாரச் செடிகள் கொண்ட வனத்தில் இருந்த ஆலயம் என்று போற்றுகின்றார்கள். இங்கே சிவலிங்கத்திருமேனிக்கு நந்திதேவர் பூஜை செய்யும் திருக்காட்சியைத் தரிசிக்கலாம்!
 
நந்தி என்றதும் தஞ்சை பெரியகோயில் நினைவுக்கு வரும். பெரியகோயிலின் நந்தி வளர்ந்துகொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அப்படியெல்லாம் கல் நந்தி வளராது என்பதே உண்மை. அதுமட்டுமா? இப்போது தஞ்சை பெரியகோயிலில் இருக்கும் நந்திக்கு, சிறப்புப் பூஜைகள் அனைத்தும் நடைபெறுகின்றன. இது ராஜராஜ சோழன் காலத்து நந்தி இல்லை. அதையடுத்து தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னர்கள் காலத்து நந்தி என்கிறது ஸ்தல வரலாறு.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில், ஆவணி மூலவீதியில், ‘மாக்காளை’ எனப்படும் நந்தி ரொம்பவே பிரபலம். சுதையால் செய்யப்பட்ட பிரமாண்டமான நந்தி. சுதையால் செய்யப்பட்ட ‘மாக்காளை’ நந்தியை,திருநெல்வேலியிலும் சுசீந்திரம் கோயிலிலும் கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோயிலிலும் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலிலும் தரிசிக்கலாம்!
 
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை கோயிலும் மலையும் மலையைச் சுற்றி வருகிற கிரிவலப் பிரார்த்தனையும் மலையின் மீது ஏற்றப்படுகிற ஜோதியும் வெகு பிரபலம். கிரிவலப்பாதையில் ஜோதி நந்தி என்றே இருப்பதை இன்றைக்கும் தரிசிக்கலாம். கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வேண்டிக்கொள்பவர்கள், இந்த நந்திக்கு தீபமேற்றி வழிபட்டுவிட்டு, கிரிவலத்தை நிறைவு செய்து, அண்ணாமலையார தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு அதிசயமும் திருவண்ணாமலையில் உண்டு. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து மலையைப் பார்த்தால், மிகமிக பிரமாண்டமான நந்தி ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். இதை நந்திமுக தரிசனம் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் சிவனடியார்கள்.
 
’ஆரூரா... தியாகேசா...’ என்று கொண்டாடப்படுகிறது திருவாரூர் திருக்கோயில். இங்கே தியாகராஜ ஸ்வாமி சந்நிதியில், சிவபெருமானுக்கு எதிரேயுள்ள நந்தியைக்கொஞ்சம்கூர்ந்து பார்த்தால், நாமே ஆச்சரியப்பட்டுவிடுவோம். அந்த நந்தி, தியாகராஜ ஸ்வாமியை ஆச்சரியமும் வியப்புமாகப் பார்க்கிற பாவனையும் சற்றே எழுந்து நிற்கப்போகிற தோரணையில் இருப்பதைத் தரிசிக்கலாம்! ’திருவாரூர் கமலாலயத்தில் குளிக்கணும்; தேரோட்டத்தை ஒருமுறையாவது தரிசிக்கணும்; நந்தியைத் தொட்டுவிட்டு, தியாகேசனை வணங்கணும்; பாவமெல்லாம் தொலையும்; மோட்சம் நிச்சயம்!’ என்பது பன்னெடுங்கால ஐதீகம்!
 
திருமூலர் பெருமான் எழுதியது திருமந்திரம். திருமூலருக்கு குருவாகவே இருந்து சிவனருள் கிடைக்க வழிகாட்டியாக இருந்தவர் நந்திதேவர். அதுமட்டுமா? ஒன்பது வேத ஆகமங்களை திருமூலருக்கு நந்திதேவர்தான் அருளினார் என்கிறது சிவாகமம்.
 
சிவபெருமானை ஆதிகுரு என்று வழிபடுகிறோம். அதேபோல், சிவபெருமானின் ஒருவடிவமான ஸ்ரீதட்சிணாமூர்த்தியை குரு என்று வணங்கி வழிபட்டுவருகிறோம். கல்லால மரத்தடியில், தட்சிணாமூர்த்தி சின் முத்திரையுடன் அமர்ந்திருக்க, அவரின் அருகில், சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கும் பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரபாதர், திருமூலர் முதலானவர்களுக்கும் நந்தியெம்பெருமானே குரு. இவர்களெல்லாம் நந்திதேவரின் சிஷ்யர்கள் என்று கொண்டாடுகிறது புராணம்.

இத்தனை பெருமைகள் மிக்க நந்திதேவருக்கு உரிய மலர்கள் சார்த்தி, பதினாறு வகையான அபிஷேகங்களையும் பிரதோஷ காலத்தில், சிவராத்திரி நாளிலும் செய்து, தரிசித்து பிரார்த்தனை செய்துவந்தால், ஏழு ஜென்மப் பாவமும் விலகும்; சிவகடாட்சம் கிடைக்கப்பெறலாம் என்பது உறுதி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow