காலம் கடந்த காதல் பாடல்... ‘உன்னிடம் மயங்குகிறேன்’ உருவான ரகசியம்!

வி.குமார் இசை, வாலியின் வரிகள், ஜேசுதாஸின் குரலில் உருவான ‘உன்னிடம் மயங்குகிறேன்’ பாடலின் பின்னணி மற்றும் என்றும் அழியாத இசை நினைவுகளை பகிரும் பதிவு.

Sep 28, 2026 - 19:00
Sep 28, 2026 - 17:57
காலம் கடந்த காதல் பாடல்... ‘உன்னிடம் மயங்குகிறேன்’ உருவான ரகசியம்!

படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி

’தேன் சிந்துதே வானம்’ என்றொரு பாட்டு உண்டு. ஆனால் அந்தப் படம் ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தில்தான்! ‘பொண்ணுக்கு தங்கமனசு’ என்ற பாடல், ‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தில் அமைந்தது. நான் சொன்ன இத்தனைப் படங்களின் பாடல்களையெல்லாம் கேட்டால், மயங்குவோம். கிறங்குவோம். மயங்கிக் கிறங்குவோம்! அதேபோல், ‘தேன் சிந்துதே வானம்’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘உன்னிடம் மயங்குகிறேன்’ பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கிறக்கம் நிச்சயம்; மயக்கம் உறுதி; அதன் பிறகான தூக்கத்துக்கு ‘நான் கியாரண்டி!’

எழுபதுகளின் மத்தியில், அதாவது 1975ம் ஆண்டு வெளியான படம் ‘தேன் சிந்துதே வானம்’. சிவகுமார், கமலஹாசன், ஜெயசித்ரா, மனோரமா முதலானோர் நடித்த இந்தப் படத்தை யாரோ தயாரித்திருந்தார்கள். ‘தயாரிப்பு வி.சி.கணேசன்’ என்று வரும். நம்ம வி.சி.கணேசன் தான், ஐம்பதுகளிலேயே நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்றாகிவிட்டாரே..! காரைக்குடி நாராயணன் வசனத்தில் உருவான இந்தப்படத்தில் பின்னாளில் பல படங்களை இயக்கி வெற்றிபெற்ற எம்.ஏ.காஜா உதவி இயக்குநராகப் பணியாற்றினார். நம் கேப்டனை அறிமுகப்படுத்தியவர். ரா.சங்கரன் இந்தப் படத்தை இயக்கினார். இந்த ரா.சங்கரன் யாரென்று சொன்னால், ‘யார் சங்கரன்’ என்று கேட்கமாட்டீர்கள். 
நிறைய படங்களில் ஐயர் அப்பாவாக, வக்கீலாக,குமாஸ்தாவாக, ‘சின்னகவுண்டர்’ படத்தொடக்கத்தில் நீதிபதியாக, ‘புதுமைப்பெண்’ரேவதியின் அப்பாவாக, ‘பொண்டாட்டி தேவை’ அஸ்வினியின் தந்தையாக... என பல படங்களில் நடித்தவர் இவர்! இங்கே, இந்தக் காலகட்டங்களில் பல படங்களை இயக்கியிருக்கிறார்.
 
சிவகுமார் - கமல், சிவகுமார்- விஜயகுமார், சிவகுமார் - ரஜினி என யார் நடித்தாலும் சிவகுமார்தான் ஹீரோ. கமல், விஜயகுமார், ரஜினி எல்லோரும் செகண்ட் ஹீரோதான். ஆக இந்தப் படத்தில் கமல் அப்படித்தான்! ஆனால் கமலுக்கு பாட்டெல்லாம் உண்டு. அதேசமயம், படத்தை இன்றைக்கும் நினைவு ஃபோல்டரில் வைத்திருக்க உதவுகிற ‘உன்னிடம் மயங்குகிறேன்’ பாட்டு சிவகுமாருக்கு!
 
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால், நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு அழைத்து வரப்பட்ட வி.குமார், மெல்லிசை மாமணி எனும் பட்டத்துக்கு உரியவர். புதுபாணியில் மெட்டமைப்பதில் வல்லவர். இவருடைய இசையில், வாலிபக் கவிஞர் வாலியின் மயக்கும் வரிகளில், கேஜே ஜேசுதாஸின் மல்கோவா குரலில். பெல்பாட்ட அண்ணன்களும் சீட்டிப்பாவாடை தாவணி அக்காக்களும் மயங்கித்தான் போனார்கள்.

பியானோவுக்கும் இசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ... ஆனால் சினிமாவில் பியானோ பாடல்களுக்கும் வெற்றிக்கும் தொடர்பு இருப்பதாகத்தான் நினைக்கிறேன். எம்ஜிஆர், சிவாஜி என்று தொடங்கி சிவசந்திரன் கூட பியானோ வாசித்து மனதில் தனியிடம் பிடித்த பாடல்களுக்கு நடித்திருக்கிறார்கள். இந்தப் பாட்டும் பியானோ வாசிக்கும் பாட்டு; சிவகுமாருக்கான பாட்டு!
 
‘காலேஜ்ல ஒரு விழா. இந்தக் கவிதைக்கு ஒரு டியூன் போட்டுக் கொடுத்தீங்கன்னா, காலேஜ் போட்டில நாங்க ஜெயிச்சிருவோம்’ என்று சொல்ல, சிவகுமாருக்காக வி.குமார் போட்ட மெலடி மொட்டுதான் இந்தப் பாட்டு!

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே

உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்............
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
என்று முடிக்கும்வரைக்கும் இவற்றையெல்லாம் இசையாக ஆரத்தழுவி, ஆமோதித்துக் கொண்டே இருக்கிற சங்கீதத்தை வாரி வழங்கியிருப்பார் வி.குமார்.

வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழி பார்வை எல்லாம் தெய்வீகம்

பூபாளம்  கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்

பூபாளம்  கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்

குரல் ஓசை குயில் ஓசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று

என்று நம்மை நாமே மறக்கச் செய்திருப்பார்களும் வாலியும் ஜேசுதாஸும்! வார்த்தை சங்கீதம், பார்வை தெய்வீகம், பூபாளப் பொழுதுகள், இன்பங்கள்... குரல் ஓசை குயில் ஓசை... மொழி பேசினாலே குரலோசைதான்; குயிலோசைதான்; அழகுதான்! இடையிசையிலும் காதலின் அமைதியை, ஆழ்மன நிம்மதியை சொல்லிக்கொண்டே இருப்பார் வி.குமார்.

தேன்சிந்தும் வானம் உண்டு மேகத்திலா
நான் சொல்லும் கானம் உண்டு ராகத்திலா
கார்காலக்குளிரும் மார்கழி பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
கார்காலக்குளிரும் மார்கழி பனியும்
கண்ணே உன் கை சேர தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது

‘தேன் சிந்தும் வானம் மேகத்தில் இருக்கா? நான் சொல்லும் கானம் ராகத்தில் இருக்கா? கார்காலக் குளிர் என்கிறோம். மார்கழிப் பனி என்கிறோம். இவையெல்லாம் உன் கைசேர்ந்தால் தணிந்துவிடும். பகல் இரவெல்லாம் பார்க்காதே கண்ணே!என்னைத் தழுவிக்கொள். இதழோரத்தில் புதுராகத்தை எழுதிக்கொள் எனும் வரிகளில் வாலி இப்போதும் எப்போதும் வாழ்ந்துகொண்டேதான் இருப்பார்.

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்

என்ற பாடல், காதலுக்குக் காதலாக, கவிதைக்குக் கவிதையாக, இசைக்கு இசையாக, பாட்டுக்குப் பாட்டாக... நம் ஜீவனுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்டு, உறவாடிக்கொண்டே இருக்கும். இன்னிசையாக தேவதை நம் பக்கத்தில் வருவாள். நாம் உள்ளத்தால் இந்தப் பாடலுக்குள் நெருங்கி, மயங்கியிருப்போம். கண்ணுக்குத் தெரியாத, ஆனால் செவிகளால் மட்டும் உணரமுடிகிற அந்த இன்னிசை தேவதை, நம் அனல் மனசுக்கு இதம் தரும் விதமாக ’உன்னிடம் மயங்குகிறேன்’ என சாமரம் வீசிவிட்டு, உறங்கவைப்பாள்! வி.குமார், வாலி, ஜேசுதாஸ் மூவரும், இன்னிசை தேவதைகள்!

ஆண்பால், பெண்பால் என்றெல்லாம் பிரிக்காமல், இசை எனும் உயிர்ப்பால் சொல்கிறேன். அவர்கள் இன்னிசை தேவதைகள்தானே..!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow