சாம்சங் விவகாரத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்காதது அடக்குமுறை - திருமாவளவன்
தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்
சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை, அதன் அடக்குமுறையை எதிர்க்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கத்தினை துவங்கி அதனை அங்கீகரிக்கக்கோரி, தொழிலாளர்கள் சம்சங் நிறுவனத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தனர். மேலும் சம்பள உயர்வு ,போனஸ், எட்டு மணி நேரம் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மீண்டும் இரண்டாவது கடிதத்தை நிறுவனத்திற்கு சமர்ப்பித்தனர். ஆனால் கடிதம் அனுப்பியும் எவ்வித பதில் அளிக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்பட்டது.
இந்த நிலையில் விரக்தி அடைந்த தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் தலைமையில் 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் samsung நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் நிறுவனம் பல்வேறு திட்டங்களை தொழிலாளர்களுக்கு கொண்டு வருவதாக கூறினாலும் கூட முக்கியமாக தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கு முன்வரவில்லை என கூறப்பட்டன.
மேலும் 30 நாட்களாக தொழிலாளர்கள் போராடி வந்த நிலையில் 31வது நாளாக இன்று போராட்டத்திற்கு வருவதற்கு முன்பாகவே இரவோடு இரவு காவல்துறையினர் போராட்ட பந்தலை அப்புறப்படுத்தினர். இதன் பின்னரும் போராட்டத்தை நீடித்த தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட இடத்திற்கு சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் மாநிலச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் போராட்டத்தை கைவிடப் போவதில் என தெரிவித்தனர். பின்னர் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக சவுந்தரராஜனையும் முத்துக்குமாரையும் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் கைது செய்து சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை திமுக கூட்டணி கட்சிகளாக விசிக, சிபிஐ. சிபிஎம், காங்கிரஸ், மமக தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “ சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும் சாம் சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்காதது அடக்குமுறை. சாம்சங் நிறுவனத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. எதன் அடக்குமுறையை எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார். இதேபோல் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் ஆகியோரும் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினர்.
What's Your Reaction?