அமைதியாக முடிந்த முதற்கட்ட வாக்குப்பதிவு... தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவு...
ஏழு கட்டங்களாக நடைபெறும் நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று இருக்கிறது. ஓரிரு வன்முறை சம்பவங்களை தவிர பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் பெரும்பான்மையான இடங்களில் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஆனால், ஒருசில இடங்களில் மாலை 6 மணிக்குள் வந்து காத்திருந்த வாக்காளர்களுக்கு மட்டும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் வழிவகை செய்யப்பட்டது. இதனால், தாமதமாக வந்த போதும் உரிய நேரத்துக்கு முன் வாக்குச்சாவடிக்குள் வந்ததால் அவர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்காளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், அரசியல் கட்சியினரின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி, 72.09% சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். ஓரிரு வன்முறை சம்பவங்களை தவிர பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாகவும் அப்போது அவர் கூறினார். கடந்த மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், இரவு 7 மணி நிலவரப்படி 3% வாக்குகள் அதிகமாகியிருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 75%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவிலும் 74%-க்கும் மேலாக வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், உள்ளிட்ட மாநிலங்களில் 50 முதல் 69 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
What's Your Reaction?